கடலூர்: பெஞ்சல் புயலால் பாதிப்பு ஆய்வு செய்ய வந்த ஒன்றிய குழுவினர், நேற்று கடலூர் மற்றும் புதுச்சேரியில் வெள்ள சேதங்களை பார்வையிட்டனர். புதுச்சேரியில் ஒன்றிய குழுவை மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் பெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அதிகம் பாதிப்புக்குள்ளான விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டு, தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தை மழை, வெள்ள பாதிப்பிலிருந்து மீட்க முதற்கட்ட ஆய்வின்படி, தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது என்றும், பாதிப்புகளின் அளவு மற்றும் சீரமைப்பின் அவசர தேவையை கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரண தொகையாக ஒன்றிய அரசு உடனடியாக ரூ.2000 கோடி விடுவிக்க வேண்டும், இதனை பார்வையிட ஒன்றிய பல் துறை குழுவை அனுப்பி வைக்கவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையில் ஒன்றிய விவசாய மற்றும் உழவர் நலத்துறை இயக்குனர் பொன்னுசாமி, ஒன்றிய நிதித்துறை அமைச்சகத்தின் செலவினத்துறை இயக்குனர் சோனா மணி ஹாபாம், ஒன்றிய ஜல்சக்தி துறை இயக்குனர் சரவணன், ஒன்றிய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை முன்னாள் பொறியாளர் தனபாலன் குமரன், ஒன்றிய எரிசக்தி துறை உதவி இயக்குனர் ராகுல், பாட்ச்கேட்டி, ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் பாலாஜி ஆகியோர் கடந்த 6ம் தேதி தமிழகம் வந்தனர்.
பின்னர் ஒன்றிய குழுவை சேர்ந்த 7 பேர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது முதல்வர், ஒன்றிய குழுவிடம் பெஞ்சல் புயலின் தற்காலிக மற்றும் நிரந்தர மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.6,675 கோடி வழங்க வேண்டிய முழு விவரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் ஒன்றிய குழுவினர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புயலால் பாதித்த 20 இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வெள்ளசேத விவரங்களை கணக்கெடுத்தனர்.
நேற்று 2வது நாளாக கடலூர் மாவட்டத்தில் பகண்டை கிராமத்தில் காலை 9.30 மணியளவில் ஒன்றிய குழுவினர் தங்களது ஆய்வு பணியை துவக்கினர். அப்போது, அங்கு திரண்டிருந்த கிராம மக்கள், தங்களது வாழ்வாதாரம் ஆண்டுதோறும் இதுபோன்று வெள்ள பெருக்கினால் பாதிக்கப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என வலியுறுத்தினர். இதை தொடர்ந்து மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் நீர்வள, நிலவளத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த பாதிப்புகள் தொடர்பான படக்காட்சிகளை பார்வையிட்ட குழுவினர் அங்கு சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதையும் பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.
மேல்பட்டாம்பாக்கத்தில் கஸ்டம்ஸ் சாலை முற்றிலுமாக சேதம் அடைந்தது குறித்தும், அழகியநத்தம் பகுதியில் 20 கிராமங்களை இணைக்கும் பாலம் துண்டிக்கப்பட்டது, விவசாய விளை நிலங்கள் மணல் புகுந்து முற்றிலுமாக மணல்மேடாக காட்சியளித்த பகுதிகளையும் பார்வையிட்டனர். பின்னர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தின்போது அனைத்து துறைகளின் சார்பிலும் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து கடற்கரை கிராமங்களான குண்டு உப்பளவாடி, கண்டக்காடு, நாணமேடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிப்பு குறித்தும் பொதுமக்களிடம் நேரடியாக கேட்டறிந்தனர். கடலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஒன்றிய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, கூடுதல் தலைமை செயலர் ககன்தீப் சிங் பேடி, வருவாய் நிர்வாக ஆணையாளர் அமுதா, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன், ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
புதுச்சேரியில் பெஞ்சல் புயலால் ஒரே நாளில் 48.4 செ.மீ மழை பெய்தது. சாத்தனூர், வீடூர் அணைகளின் உபரி நீர் திறப்பால், தென்பெண்ணையாறு மற்றும் சங்கராபரணி ஆறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள புதுச்சேரிக்கு உள்பட பல கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும், சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீரில் முழ்கி பயிர்கள் கடும் சேதத்துக்கு உள்ளானது. கனமழைக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கடலூரில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த குழுவினர் நேற்று பிற்பகல் புதுச்சேரிக்கு சென்றனர். பின்னர், பாகூர் முள்ளோடையில் உள்ள துணை மின் நிலைய பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்டனர். தொடர்ந்து, ஒன்றிய குழுவினர் டி.என்.பாளையம் இருளர் குடியிருப்பு பகுதியில் வீடு, வீடாக சென்று பார்த்தனர். அங்கிருந்து திரும்பி வரும்போது, டி.என்.பாளையம் பேட் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஒன்றிய குழுவினர் வந்த காரை வழி மறித்தனர்.
அப்போது, இணை செயலாளர் ராஜேஷ் குப்தாவிடம்,‘மழை வெள்ளத்தால் தங்களின் ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் சேதமடைந்தன. மின்சாரமும் இல்லை. அரசு சார்பில் எங்களுக்கு எந்தவித உதவிகளையும் செய்யவில்லை’ என்று ஆவேசமாக கூறினர். இதையடுத்து டி,என்.பாளையம் பேட் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ள குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு விட்டு அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளி அருகே புறப்பட வந்தனர். அங்கு இணை செயலாளர் ராஜேஷ்குப்தா, சபாநாயகர் செல்வம், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆவேசமாக பேசினர்.
மல்லட்டாறை சுத்தம் செய்யாத காரணத்தால் மழைவெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. வெள்ளம் புகுந்த நேரத்தில் அரசு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்குள்ள மாரியம்மன் கோயில் வீதி பகுதியை பார்வையிட வேண்டும் என்று கூறினர். ஆனால், ஒன்றிய குழுவினர் பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். இருப்பினும், பொதுமக்கள் ஒன்றிய குழுவினர் செல்லாத வகையில் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஒன்றிய குழுவினர் அங்குள்ள மலட்டாறு பகுதியை சென்று பார்வையிட்டு அங்கிருந்து புறப்பட்டு பிற இடங்களுக்கு சென்றனர்.
ஆய்வை முடித்து கொண்டு, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், தலைமை செயலர் சரத் சவுகான் ஆகியோரை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து இன்று காலை வில்லியனூர், சந்தை புதுக்குப்பம், சுத்துக்கேணி, வாதானூர் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த பயிர்கள், சாலைகள், அரசு கட்டிடங்கள், மின் நிலையங்களை ஒன்றிய குழுவினர் பார்வையிட உள்ளனர். பிற்பகல் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். பின்னர் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்களை சந்தித்து சேத பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். ஆய்வுப்பணிகளை முடித்துக்கொண்டு இன்று இரவு சென்னை செல்கின்றனர்.
The post கடலூர், புதுச்சேரியில் 2வது நாளாக ஆய்வு ஒன்றிய குழுவை மக்கள் முற்றுகை: அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் appeared first on Dinakaran.