ஜிஎஸ்டி வரியை மேலும் உயர்த்த மோடி திட்டம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரியை மேலும் உயர்த்த மோடி திட்டமிட்டு இருப்பதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி தலைமையிலான அரசு மேலும் ஒரு ஜிஎஸ்டி வரிவிகிதத்தை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. இந்த அநீதியைகாங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும். ஜி.எஸ்.டி.யில் இருந்து வசூல் அதிகரித்து வரும் நிலையில், அரசு புதிய வரி விகிதத்தை அறிமுகப்படுத்தப் போகிறது. அன்றாட தேவைக்கான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யை உயர்த்தும் திட்டம் உள்ளது.

சற்று யோசித்துப் பாருங்கள், தற்போது திருமண சீசன் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் தங்கள் ஒவ்வொரு ஊதியத்தையும் அதற்காக சேமித்து வைத்திருக்க வேண்டும், இதற்கிடையில், 1,500 ரூபாய்க்கு மேல் விலையுள்ள ஆடைகளுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அரசாங்கம் உயர்த்தப் போகிறது. இது ஒரு பெரிய அநீதி. கோடீஸ்வரர்களுக்கு வரிச் சலுகைகளை அளிப்பதற்காகவும், அவர்களின் பெரிய கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காகவும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்திற்கு வரி விதிக்கிறார். எங்கள் போராட்டம் இந்த அநீதிக்கு எதிரானது. சாமானிய மக்கள் மீதான வரிச்சுமைக்கு எதிராக நாங்கள் கடுமையாக குரல் எழுப்புவோம், மேலும் இந்த கொள்ளையை நிறுத்த அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜிஎஸ்டி வசூல் 2019ல் ரூ.5.98 லட்சம் கோடியிலிருந்து 2024ல் ரூ.10.61 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதே போல் 2019ல் ரூ.4.92 லட்சம் கோடியாக இருந்த வருமான வரி, 2024ல் 11.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் பெருநிறுவனங்களுக்கான வரி 2019ல் ரூ.5.56 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அதாவது 2024ல் ரூ.10.2 லட்சம் கோடியாக மட்டுமே உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி அதுதொடர்பான கிராபிக்ஸ் படத்தையும் வெளியிட்டுள்ளார்.

 

The post ஜிஎஸ்டி வரியை மேலும் உயர்த்த மோடி திட்டம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: