எதிர்கால நகரமயமாக்குதலுக்கு தேவையான உள்கட்டமைப்புக்கு தேவைப்படும் நிதியை 16வது நிதிக்குழு ஒதுக்கீடு செய்ய வேண்டும்: முதல்வர் கோரிக்கை


சென்னை: எதிர்கால நகரமயமாதலுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு தேவைப்படும் நிதியை 16வது நிதிக்குழு ஒதுக்கீடு செய்ய வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதார வல்லுநர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16வது நிதிக்குழுவின் கூட்டம் தமிழ்நாட்டில் நடந்தது. இந்த நிதிக்குழு எடுக்க உள்ள முடிவுகள், நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான நிதி செயல்பாடுகளுக்கு வடிவம் கொடுப்பது மட்டுமின்றி, எதிர்வரும் காலங்களில் இந்தியா தேர்வு செய்யப்போகும் பொருளாதார பாதையின் மீதும் தாக்கம் செலுத்தக் கூடியவையாகும். 15வது நிதிக்குழு மாநிலங்களுக்கு 41% வரிப்பகிர்வு அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த நிலையிலும், முதல் 4 ஆண்டுகளுக்கு ஒன்றிய அரசின் வரி வருவாயில் இருந்து 33.16 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டது.

ஒன்றிய வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு 50 சதவீத வரிப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். கடந்த 45 ஆண்டுகளாக, கிடைமட்ட வரிப்பகிர்வு முறையின் மூலமாக பின்பற்றுபட்டு வந்த மறுபங்கீட்டு கொள்கையானது, வளர்ச்சிக்கு பெரியளவில் உதவவில்லை என்பது தெளிவாகிறது. எனவே இங்கு எழும் அடிப்படை கேள்வி என்னவென்றால், குறைந்த அளவிலான தேசிய பொருளாதார வளங்களுடன், வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களுக்கு பெரிய பங்கை வழங்குவதில், கவனம் செலுத்தப்போகிறோமா அல்லது பெரிய அளவிலான தேசிய பொருளாதார வளங்களுடன், அனைவருக்கும் அதிகமான வளங்களை பகிர்ந்தளிக்கும் சமமான பங்கீட்டு கொள்கையை பின்பற்றுவதில் கவனம் செலுத்தப் போகிறோமா? இதற்கான விடை சிக்கலானது; இருப்பினும் இதில் சமச்சீரான அணுகுமுறையே பெரிய அளவிலான தேசிய பொருளாதார வளங்களுடன், வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களுக்கு தேவையான பகிர்வை அளிக்கவும், முன்னேற்ற பாதையில் இருக்கும் மாநிலங்களின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க தேவையான வளங்களை பகிர்ந்தளிக்கவும் உதவும்.

தமிழ்நாடு போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்கள் மக்கள்தொகை மற்றும் நகரமயமாதல் போன்ற தனித்துவமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. தேசிய சராசரியை விட வயதானோர் எண்ணிக்கை அதிகரிப்பு, வயதான மக்களுக்கான ஆதரவு திட்டங்களுக்கு ஆகும் செலவினங்கள் அதிகரிக்கும் நிலையில், நுகர்வு அடிப்படையிலான வரி வருவாய் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதுபோன்ற மாநிலங்கள் வளர்ச்சியில் தேக்கமடையும். அதேபோல், வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் நகரமயமாதல் உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய சவால்களில் ஒன்றாகும். தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நாட்டிலேயே வேகமாக நகரமயமாதல் அதிகரிக்கும் சவாலை எதிர்கொண்டுள்ளன. இதன் காரணமாக 2031ம் ஆண்டு அதன் நகர்ப்புற மக்கள்தொகை 57.30 சதவீதம் என்ற நிலையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது அப்போதைய தேசிய சராசரியான 37.90 சதவீதத்தை விட அதிகமாக இருக்கும். எனவே, நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் எதிர்கால நகரமயமாதலுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு தேவைப்படும் வளங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிதிக்குழுவின் பரிந்துரைகள் பொருளாதார கணக்குகளுக்கு அப்பாற்பட்டது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அனைத்து மாநிலங்களும் சமமாகப் பங்களித்து, அதிலிருந்து பலனடைவதற்கும் உகந்த எதிர்காலத்தை தீர்மானிப்பதும் கூட. அது உற்பத்தியை ஊக்குவிப்பது, நகரமயமாதல் சவால்களை எதிர்கொள்வது அல்லது காலநிலை மாற்றத்தை கையாள்வது என எதுவாக இருப்பினும், நிதிக்குழுவின் பரிந்துரை கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் வரிசையில் இந்தியாவை நிலைநிறுத்த தேவையான பாதையையும் தீர்மானிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post எதிர்கால நகரமயமாக்குதலுக்கு தேவையான உள்கட்டமைப்புக்கு தேவைப்படும் நிதியை 16வது நிதிக்குழு ஒதுக்கீடு செய்ய வேண்டும்: முதல்வர் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: