குடியரசு தின அணி வகுப்பில் தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தி மீண்டும் நிராகரிப்பு

சென்னை: டெல்லியில் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று ஆண்டுதோறும் நிகழ்ச்சி நடைபெறும். அதனை தொடர்ந்து 15 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் நடைபெறுவது வாடிக்கையான ஒன்று. ஆனால், சமீப காலமாக அதற்கான மாநிலங்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கடந்த 2022ம் ஆண்டு குடியரசு தின விழாவில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் தேர்வு செய்யப்படவில்லை.

இது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனங்களை அப்போது தெரிவித்தார். மேலும், அந்த அலங்கார ஊர்தி தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்தநிலையில், வருகிற ஜனவரி மாதம் 26ம் தேதி குடியரசு தினத்தன்று அலங்கார ஊர்தி அணி வகுப்பில் இடம்பெறும் மாநிலங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில், 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழ்நாடு பெயர் அதில் இல்லை.

பீகார், சண்டிகர், தாத்ரா – நாகர் ஹவேலி மற்றும் டையூ -டாமன், கோவா, ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், ஆந்திரப் பிரதேசம், குஜராத், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் அரியானா ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. அலங்கார ஊர்தி அணிவகுப்பில் மீண்டும் தமிழ்நாடு பெயர் இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், டெல்லி அரசின் ஊர்தி தொடர்ந்து 4 வது ஆண்டாக நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜ ஆளும், உத்தரபிரதேசம், குஜராத் மாநிலங்கள் ஆண்டு தோறும் இடம்பெற்று வருகின்றன.

The post குடியரசு தின அணி வகுப்பில் தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தி மீண்டும் நிராகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: