அரசு வாகனத்தை சேதப்படுத்திய விவகாரம்: அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி சஸ்பெண்ட்

சென்னை: காவல்துறை சார்பில் சென்னை பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வரும் எஸ்ஐக்கு வழங்கப்பட்ட அரசு வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமியை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் இளையராஜா. உதவி ஆய்வாளரான இவர், தற்போது சென்னை பெருநகர பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இவர் வசிக்கும் அதே குடியிருப்பின் கீழ் தளத்தில் பெண் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வசித்து வருகிறார். இருவருக்கும் குடியிருப்பில் உள்ள காலி இடம் பிரசனை இருந்து வருகிறது. இந்நிலையில் உதவி ஆய்வாளர் இளையராஜாவுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட பைக் மற்றும் அவரது மனைவியின் ஸ்கூட்டரை பெண் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் அவரது கணவரும் ஓய்வு பெற்ற டிஎஸ்பியான சவுந்தர்ராஜன் ஆகியோர் கத்தியால் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். இது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானது.

பின்னர் சம்பவம் குறித்து உதவி ஆய்வாளர் இளையராஜா மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பெண் இன்ஸ்பெக்டர் அவரது கணவர் மீது 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அரசு வாகனத்தை சேதப்படுத்தி ஒழுங்கீனமாக செயல்பட்டதாக சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். அதற்கான உத்தரவும் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமியிடம் வழங்கப்பட்டுள்ளது.

The post அரசு வாகனத்தை சேதப்படுத்திய விவகாரம்: அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: