இந்திய அணியில் ரோகித் சர்மா வந்து விட்டதால் அவர் தான் ஓபனிங் இறங்குவார். ராகுல் பின்வரிசையில் இறங்குவார் என கூறப்பட்டு வந்தது. இதற்கு ராகுலும் நான் எந்த வரிசையிலும் இறங்க தயார் என ஒரே வரியில் கூறி இவ்விவாதத்தை முடித்து வைத்தார். எனிலும் இந்திய அணியின் ஓபனிங்கில் ஜெய்ஸ்வாலுடன், ரோகித்தா அல்லது ராகுல் விளையாடுவாரா என சஸ்பென்ஸ் நீடித்து வந்தது. நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் ரோகித் அந்த சஸ்பென்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
அவர் கூறுகையில், ‘‘முதல் டெஸ்டில் ராகுலின் ஆட்டத்தை வீட்டில் இருந்தபடியே சமீபத்தில் பிறந்த குழந்தையுடன் கண்டுகளித்தேன். அவரது ஆட்டம் அற்புதம். வெளிநாடுகளில் ராகுலின் பேட்டிங் என்றுமே மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது. அதனால் இப்போதைக்கு எந்த மாற்றமும் தேவையில்லை. ஓபனிங்கிற்கு ராகுலே தகுதியானவர். ஜெய்ஸ்வால் – ராகுலின் பார்ட்னர்ஷிப் தான் கடந்த போட்டியை எங்களுக்கு வென்று கொடுத்தது. அதனால் ஓபனிங் விஷயத்தில் எனக்கு எந்த குழப்பமும் இல்லை. அவர்கள் இருவர்தான் ஓபனிங் இறங்குவார்கள். வாஷிங்டன் சுந்தர் சிறந்த வீரர்.
காயம் காரணமாக அவர் மேட்சுகளை தவற விட நேர்ந்தது. அஸ்வின், ஜடேஜா சூழலை பொறுத்துதான் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டு உள்ளனர். அதனால் அவர்களின் கேரியர் முடிந்து விட்டது என்ற அர்த்தம் இல்லை. அணிக்கு தேவைப்படும்போது அவர்களால் பெர்பார்மென்ஸ் நிச்சயம் கொடுக்க முடியும். ஆஸ்திரேலியாவுக்கு நாங்கள் முதலில் வந்த போது எப்படி ரன்கள் எடுக்க போகிறோம் என்பதில்தான் கவனம் வைத்தோம். ஆனால் புதிய தலைமுறை வீரர்கள் ஜெய்ஸ்வால், பண்ட் ஆகியோர் போட்டியை எப்படி வெல்ல வேண்டும் என்பதில்தான் முழு கவனம் வைத்திருக்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.
The post இந்தியா – ஆஸி. 2வது டெஸ்ட் இன்று துவக்கம்: ஓபனிங்கில் களமிறங்குவது யார்? சஸ்பென்சை உடைத்தார் ரோகித் சர்மா appeared first on Dinakaran.