முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி வெளியிடப்பட்ட ‘ஒரே தலைவன்’ வீடியோ ஒரு கோடி பார்வையாளர்களை கடந்தது

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி வெளியிடப்பட்ட ‘ஒரே தலைவன்’ வீடியோ ஒரு கோடி பார்வையாளர்களை கடந்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 1ம் தேதி தனது 73வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ‘ஒரே தலைவன்’ என்ற சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டது. யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்ட சிறப்பு வீடியோ, ஒரு கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த வீடியோ, முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஐம்பது ஆண்டுகால நீண்ட அரசியல் பயணத்தையும், அவர் எதிர்கொண்ட சவால்களையும் விரிவாக பதிவு செய்துள்ளது. மிசா காலத்தில் சிறை சென்றது முதல், மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றது வரையிலான அவரது விடாமுயற்சியை இது படம் பிடித்துக் காட்டுகிறது.

திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை தத்துவங்களான சமூக நீதி, சமத்துவம், அனைவருக்குமான வளர்ச்சி ஆகியவற்றை இந்த தொகுப்பு முன்னிலைப்படுத்துகிறது. குறிப்பாக, காலை உணவுத் திட்டம், மகளிருக்கான விடியல் பயணம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை போன்ற முன்னோடித் திட்டங்கள் சாமானிய மக்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள நேர்மறையான மாற்றங்களை எடுத்துரைக்கிறது. இத்திட்டங்களை வெறும் இலவசங்களாக பார்க்காமல், சமூக மேம்பாட்டிற்கான ‘மனித முதலீடு’ என்று வரையறுக்கிறது.

மேலும், மாநில உரிமை, இந்தி திணிப்பு எதிர்ப்பு, கூட்டாட்சி தத்துவங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுள்ள சமரசமற்ற நிலைப்பாட்டை விவரிக்கிறது. கலைஞரின் கடின உழைப்பையே தனது பாதையாகக் கொண்டு செயல்படும் முதல்வரின் ஆளுமையைப் பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆளுமையை விளக்கும் வகையில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, மநீம தலைவர் கமல்ஹாசன் எம்பி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களின் கருத்துகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த காணொலி ஒரு கோடிக்கும் அதிகமான மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Stories: