தமிழ்நாட்டில் ஃபெஞ்ஜல் புயல் பாதிப்பு.. மக்களவையை ஒத்திவைத்து பாதிப்பு குறித்து விவாதிக்க கோரி திமுக நோட்டீஸ்..!!

டெல்லி: தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு குறித்து மக்களவையை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க கோரி திமுக நோட்டீஸ் அளித்துள்ளது. வங்கக் கடலில் கடந்த 23ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் 26ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கு அருகே வந்து ஃபெஞ்ஜல் புயலாக வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டது. மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே புயல் கரையைக் கடந்தது. சூறைக்காற்றுடன் மழை கொட்டியது.

மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே ஃபெஞ்ஜல் புயல் நேற்று முன்தினம் கரையை கடந்தது. இதனால் சென்னை உள்பட வடமாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சூறைக்காற்றுடன் மழை கொட்டியது. இதன் காரணமாக இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டியது. அதிகனமழை மற்றும் காற்றின் காரணமாக சாலைகள் மற்றும் விவசாய நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வடதமிழக கடலோர மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு புயல் பாதிப்புகள் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார். அந்த நோட்டீஸில், மழை பாதிப்பை கணக்கிட ஒன்றிய அரசின் குழுவை அனுப்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டில் ஃபெஞ்ஜல் புயல் பாதிப்பு.. மக்களவையை ஒத்திவைத்து பாதிப்பு குறித்து விவாதிக்க கோரி திமுக நோட்டீஸ்..!! appeared first on Dinakaran.

Related Stories: