விதி மீறும் வாகனங்களால் தொடரும் விபத்து அபாயம்: சிசிடிவி பொருத்த கோரிக்கை

 

மதுரை, டிச. 2: மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக, சாலை விரிவாக்கம் மற்றும் புதிய மேம்பாலங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளில், நெடுஞ்சாலைத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன்படி, ராமேஸ்வரம் – கொச்சி சாலையில் மதுரை – தேனி மார்க்கத்தில் முடக்குச் சாலை சந்திப்பில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ரூ.53 கோடியில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டது.

மேலும், தத்தனேரி மேம்பாலத்தில் மதுரையிலிருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் வைகை வடகரை பைபாஸ் சாலை வழியாக செல்வதற்கு ரூ.9.50 கோடியிலும் இணைப்பு பாலமும் கட்டப்பட்டன. இதில், முடக்குச் சாலை மேம்பாலம் நான்கு வழிச்சாலையுடன் கூடிய இருவழித்தடம் கொண்டதாகவும், தத்தனேரி இணைப்பு பாலம் நான்கு வழிச்சாலையுடன் கூடிய ஒருவழித்தடம் கொண்டதாகவும் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டில் உள்ளன.

எனினும், இந்த பாலங்களில் வாகன ஓட்டிகள் எதிரெதிர் திசையில் வருவது, அதிவேகத்தில் செல்வது உள்ளிட்ட விதிமீறல்களில் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். இதனால், அடிக்கடி விபத்துக்கள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் காயமடைவது தொடர்கிறது. இது குறித்து, பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும், வாகன ஓட்டிகள் கேட்க மறுக்கின்றனர். எனவே, இரண்டு பாலங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதித்தால் மட்டுமே, விபத்துக்களை தடுக்க முடியும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

The post விதி மீறும் வாகனங்களால் தொடரும் விபத்து அபாயம்: சிசிடிவி பொருத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: