விழுப்புரம், டிச. 27: தேஜ கூட்டணியில் நீடிப்பது குறித்த முடிவை பாமக நிறுவனர் ராமதாஸ்தான் அறிவிக்க வேண்டுமென பாஜ மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏஜி சம்பத் தெரிவித்தார். விழுப்புரம் பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏஜி சம்பத் கூறுகையில், வாஜ்பாய் 100வது பிறந்தநாளையொட்டி பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சிறுசேமிப்பு திட்டத்தின்கீழ் முதல் தவணை ₹1000 நாங்கள் செலுத்தி வருகிறோம்.
வாஜ்பாய் ஆட்சியில்தான் தங்க நாற்கர சாலை, மென்பொருள் துறை, மகளிர் வளர்ச்சி போன்றவை கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்தபோதே முதலமைச்சருக்கு நாங்கள் நன்றியை தெரிவித்து கொண்டோம். தற்போது மணிமண்டபம் திறப்பு விழாவில் முறையான அறிவிப்பு வந்தால் நானும் முதலமைச்சருடன் கலந்து கொள்வேன். இல்லாவிட்டாலும் நிகழ்ச்சி முடிந்தபின் அங்கு சென்று முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பேன் என்றார்.
அதைத் தொடர்ந்து கூட்டணி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசி வருவது குறித்து கேட்டபோது, எங்கள் கூட்டணியில் நீடிப்பது குறித்து அவர்கள்தான் அறிவிக்க வேண்டும். நாங்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை என தெரிவித்தார்.
The post தேஜ அணியில் நீடிப்பது குறித்து ராமதாஸ் அறிவிக்க வேண்டும் appeared first on Dinakaran.