காஞ்சிபுரம், டிச.2: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் நேற்று, கார்த்திகை மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமையான பக்தர்கள் தலையில் மண்சட்டியில் மாவிளக்கு எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கச்சபேஸ்வரர் கோயில் வளாகத்தில் ஒரு புது மண் சட்டியில் மாவிளக்கு மாவுபோல் வைத்து பின் அதன் நடுவில் அகல் தீபம் ஏற்றி வைத்து, பின் அதற்கு நைவேத்தியப் பொருள்கள் சமர்ப்பித்து, பின் தலையில் சுமந்துகொண்டு கோயிலை வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தால் தலைவலி, காதுவலி கண்ணில் ஏற்படும் பிணிகள் எல்லாம் நீங்கும் என்பது ஐதீகம்.
அதன்படி, இந்த நோய் தீர வேண்டிக்கொண்டு நோய் குணமானவுடன் நேர்த்திக் கடனாக கார்த்திகை மாதம் கடைஞாயிறு தினத்தில் தலையில் மாவிளக்கு ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்துவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். பெஞ்சல் புயல் எதிரொலியாக காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த வாரம் குறைவான அளவே பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர். மேலும், கடைஞாயிறு விழாவுக்காக சாலையோரம் கடை வைத்திருந்த வியாபாரிகளின் வியாபாரமும் தொடர் மழையால் பாதித்தது.
The post காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் 3வது வார கடை ஞாயிறு விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.