சென்னை: காரைக்கால் – புதுச்சேரி இடையே இன்று மாலை ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் என தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தற்போது புதுச்சேரிக்கு வடகிழக்கே 100 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 100 கி.மீ. தொலைவிலும் உள்ளது. ஃபெஞ்சல் புயல் நகரும் வேகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஃபெஞ்சல் புயல் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. காரைக்கால் – புதுச்சேரி இடையே இன்று மாலை ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும். புயல் கரையை கடக்கும்போது திருவள்ளூர் தொடங்கி மயிலாடுதுறை வரை 90 கி-மீ வேகத்தில்
காற்று வீசும்.
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது அதன் நகரும் வேகம் சற்று குறையக் கூடும். சென்னை மற்றும் அதனை ஒட்டி உள்ள மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 5 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னையின் பல இடங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது. சென்னையில் 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசியுள்ளது. அதிகாலை 5 மணி முதல் 8.30 மணி வரை நுங்கம்பாக்கத்தில் 4.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மீனவர்கள் அடுத்த 2 தினங்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
The post காரைக்கால் – புதுச்சேரி இடையே இன்று மாலை ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும்: பாலச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.