ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரவில் உலா வந்த ஒற்றை யானை: விவசாயிகள் பீதி

 

ஸ்ரீவில்லிபுத்தூர், நவ.30: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, தொட்டியபட்டி பகுதியில் ஒற்றை காட்டு யானை சுற்றித்திரிந்ததால் விவசாயிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து அந்த யானையை காட்டுப் பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் செண்பகத்தோப்பு, பந்தப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக ஒற்றை யானை சுற்றித் திரிகிறது.

இந்த யானை அவ்வப்போது விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதனால். விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு சென்றுவர அச்சப்பட்டு வருகின்றனர். ஒற்றை யானையை வனப்பகுதியில் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர், அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர 4 காட்டு யானைகள் கொண்ட கூட்டமும் இந்த பகுதியில் சுற்றித்திரிகின்றது.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தொட்டியபட்டி, பந்தப்பாறை கிராம பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு ஒற்றை யானை சுற்றித் திரிந்தது. இதனால் கிராம மக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்தனர். இது குறித்து கிராம மக்கள் தெரிவித்த தகவலின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை ரேஞ்சர் செல்லமணி தலைமையில் வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்து காட்டுப் பகுதிக்குள் ஒற்றை யானையை விரட்டியடித்தனர். இதையடுத்து கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரவில் உலா வந்த ஒற்றை யானை: விவசாயிகள் பீதி appeared first on Dinakaran.

Related Stories: