விழுப்புரம், நவ. 29: விழுப்புரம் அருகே தனியார் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த இலங்கை அகதி உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே புதுச்சேரி எல்லையான கெங்கராம்பாளையம் சோதனை சாவடியில் வெளிமாநில மது, சாராயம் கடத்தலை தடுக்க போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று வளவனூர் போலீசார் இந்த சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த தனியார் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது பேருந்தில் சந்தேகத்தின்பேரில் இருந்த 2 பேரிடம் நடத்திய சோதனையில் 545 கிராம கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு ₹25,000 ஆகும். தொடர்ந்து அவர்களை கீழே இறக்கி விசாரணை நடத்தியதில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கேம்ப் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமை சேர்ந்த தீபகரன்(36) என்பதும், மற்றொருவர் ராமநாதபுரம் அக்காமடத்தை சேர்ந்த அன்டனிபோரீஸ்எல்சின்(32) என்பதும், புதுச்சேரியிலிருந்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தப்பியோடிய சேலத்தை சேர்ந்த செந்தூரன் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.
The post விழுப்புரம் அருகே பரபரப்பு பேருந்தில் கஞ்சா கடத்திய இலங்கை அகதி உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.