பரங்கிப்பேட்டை அருகே உலக பிரசித்தி பெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரிக்கு அனுமதி மறுப்பு

புவனகிரி, நவ. 29: பரங்கிப்பேட்டை அருகே உள்ள பிரசித்திபெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையம் மழையால் மூடப்பட்டது. இதையடுத்து படகு சவாரிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பரங்கிப்பேட்டை அருகே உள்ளது பிச்சாவரம் சுற்றுலா மையம். உலக பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் படகுகளில் சவாரி செய்து சுரபுன்னை எனப்படும் அலையாத்தி காடுகளின் அழகை கண்டு ரசிப்பார்கள். இந்நிலையில் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் தற்போது மழை பெய்து வருவதால் படகு சவாரி நிறுத்தப்பட்டு, படகு இல்லம் மூடப்பட்டுள்ளது. நேற்று காலை மழை இல்லாத நிலையில், பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி துவங்கியது.

பிச்சாவரத்திற்கு வந்த ஒரு சில சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுத்து படகு சவாரி செய்தனர்.ஆனால் சில நிமிடங்களில் மீண்டும் சாரலுடன் மழை பெய்ய துவங்கியது. இதனால் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரிக்கான டிக்கெட் கொடுப்பது நிறுத்தப்பட்டு, படகு சவாரிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மழையால் சுற்றுலா மையம் மூடப்பட்டதால் படகு சவாரி செய்ய வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சுற்றுலா மையத்தில் உள்ள படகு இல்லத்தை சுற்றிலும் தண்ணீர் அதிகரித்து காணப்பட்டது.

படகுகளை சுற்றி தண்ணீர் தேங்கி இருந்ததாலும், படகு இல்லத்திற்கு நடந்து செல்லும் நடைபாதையிலும் தண்ணீர் தேங்கி இருந்ததாலும் படகுகளில் ஏறுவதற்கு சுற்றுலா பயணிகள் அவதிப்படும் நிலை இருந்தது. மேலும் வாகனங்கள் நிறுத்தும் இடம், பொதுமக்கள் நடந்து செல்லும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கி இருந்தது. இதுபற்றி கூறிய சுற்றுலா பயணிகள், ‘படகு சவாரி செய்வதற்காக ஆர்வத்துடன் வந்தோம். ஆனால் மழையால் படகு சவாரிக்கு அனுமதிக்கவில்லை. அதனால் ஏமாற்றத்துடன் செல்கிறோம்’ எனக் கூறினர்.

The post பரங்கிப்பேட்டை அருகே உலக பிரசித்தி பெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரிக்கு அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: