கோக்கலாடா பள்ளியில் மீண்டும் கரடி அட்டகாசம்: பொருட்களை சூறையாடியது; ஆசிரியர்கள், மாணவர்கள் பீதி

மஞ்சூர், நவ.28: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் மிகுதியாக உள்ளதுடன் அவைகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பெங்கால் மட்டம் கோக்கலாடா பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் இப்பகுதியில் உலா வரும் கரடி ஒன்று பள்ளியின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சூறையாடி செல்வது வாடிக்கையாக உள்ளது. தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு இப்பகுதிக்கு வந்த கரடி பள்ளியின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது. தொடர்ந்து, உட்புறம் இருந்த தலைமையாசிரியர் அலுவலகத்தின் கதவையும் உடைத்த கரடி அங்கிருந்த மேஜை மற்றும் அலமாரிகளில் வைக்கப்பட்டிருந்த நோட்டு, புத்தகங்கள் மற்றும் பல பொருட்களை கீழே தள்ளி சூறையாடியதுடன் பீரோ, மேஜை, இருக்கைகளையும் கீழே தள்ளி விட்டு சென்றுள்ளது. இதேபோல் வகுப்பறைக்குள்ளும் நுழைந்து மாணவ, மாணவிகளின் புத்தகங்கள், பொருட்களை சூறையாடியது.

இந்நிலையில் மறுநாள் காலையில் பள்ளிக்கு சென்ற ஆசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவிகள் அலுவலகம் மற்றும் வகுப்பறைகளில் புத்தகம் மற்றும் பொருட்கள் சிதறி அலங்கோலமாக காட்சியளிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து இப்பள்ளியில் பலமுறை கரடி கதவுகளை உடைத்து பொருட்களை சூறையாடி வருவது, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும் என ஆசிரியர்கள். பொதுமக்கள் வலியுறுத்தினர்.

The post கோக்கலாடா பள்ளியில் மீண்டும் கரடி அட்டகாசம்: பொருட்களை சூறையாடியது; ஆசிரியர்கள், மாணவர்கள் பீதி appeared first on Dinakaran.

Related Stories: