கடலூர், நவ. 28: எச்சரிக்கையை மீறி 2 நாட்டு படகுகளில் மீன் பிடிக்க சென்ற மீனவரின் படகு கவிழ்ந்தது. இதில் 6 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். வங்கக் கடலில் உருவாகியுள்ள பெங்கல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த புயல் வருகிற 30ம் தேதி கடலூருக்கும் சென்னைக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனால் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் அனைவரும் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி கடலூர் அருகே உள்ள தைக்கால் தோணித்துறை பகுதியை சேர்ந்த சகாதேவன் மகன் மணிக்கண்ணன்(35), முருகன் மகன் தமிழ்(37), சந்திரன் மகன் சாமிதுரை(63), ஆடியபாதம் மகன் மணிமாறன்(30), ரமேஷ் மகன் தினேஷ்(29), கந்தசாமி மகன் சற்குணன்(23) ஆகிய 6 மீனவர்கள் நேற்று அதிகாலை 2 நாட்டு படகுகளில் தைக்கால் தோணித்துறையில் இருந்து பரவனாறு நோக்கி மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் சித்திரைப்பேட்டை கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, கடல் அலை சீற்றமாக இருந்ததால் அவர்கள் சென்ற ஒரு படகு கவிழ்ந்துள்ளது. அதில் இருந்த 3 மீனவர்களும் நீந்தி ஒரே படகில் ஏறி உள்ளனர். பின்னர் அவர்கள் தங்கள் படகை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து 6 பேரும் சித்திரைப்பேட்டை அருகில் கெம்பிளாஸ்ட் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் அணையும் தளத்திற்கு சென்றனர்.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, புயல் எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் இருந்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதையும் மீறி இந்த 6 மீனவர்களும் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அதை அவர்களது குடும்பத்தாரும் தடுத்துள்ளனர். ஆனால் எதையும் கேட்காமல் அவர்கள் 2 நாட்டு படகுகளில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். சித்திரை பேட்டை கடல் பகுதியில் படகு கவிழ்ந்ததால் அவர்கள் தற்போது தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான படகு அணையும் தளத்தில் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 6 மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளனர். நாங்கள் தொடர்ந்து அவர்களிடம் பேசி வருகிறோம். அவர்களை மீட்க கடலோர பாதுகாப்பு படையின் உதவியை நாடியுள்ளோம். மேலும் கடல் அலை சீற்றமாக உள்ளதால், படகில் கடலில் செல்ல முடியவில்லை. கடலின் சீற்றம் குறைந்த பிறகு அந்த 6 மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர். இச்சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post கடலுக்கு 2 நாட்டு படகுகளில் எச்சரிக்கையை மீறி மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் படகு கவிழ்ந்தது appeared first on Dinakaran.