இதை தொடர்ந்து, ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் வீட்டுக்கு சென்று, தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது தந்தையும், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது உதயநிதிக்கு சால்வை அணிவித்து, உச்சி முகர்ந்து அவருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். மேலும் மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் புத்தகம் பரிசாக வழங்கினார். அப்போது தாயார் துர்கா ஸ்டாலினிடமும் உதயநிதி காலில் விழுந்து ஆசி பெற்றார். அவரை துர்கா ஸ்டாலின் உச்சி முகர்ந்து வாழ்த்தினார். அப்போது கேக் கொண்டு வரப்பட்டு குடும்பத்தார் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் கேக் வெட்டி கொண்டாடினார்.
இதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, பரந்தாமன், எழிலரசன், மாவட்டச் செயலாளர் சிற்றரசு, பகுதிச் செயலாளர் மதன்மோகன், தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல வாரியம் உறுப்பினர் ரெ.தங்கம், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் சித்திக் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.
இதையடுத்து, வேப்பேரியில் உள்ள பெரியார், மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவுத் தூண் ஆகிய நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பெரியார் நினைவிட நுழைவாயிலில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்றனர். அப்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், துணை முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், கல்லூரி மாணவர்கள், சுயஉதவிக்குழு மகளிர், விளையாட்டு வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியும் சிறப்பித்தார்.
இதையடுத்து பெரியார் அருங்காட்சியகத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியை, துணை முதல்வர் சந்தித்து சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துப் பெற்றார். தொடர்ந்து, அண்ணாநகரில் உள்ள பேராசிரியர் அன்பழகன் இல்லத்துக்கு சென்று அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவர் கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்துக்கு சென்று கலைஞர் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது தனது பாட்டி தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.
பின்னர் மறைந்த முரசொலி செல்வம் வீட்டுக்கு சென்று, செல்வியிடம் வாழ்த்து பெற்றார். இதையடுத்து, சி.ஐ.டி.நகரில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு சென்று அவரிடம் ஆசி பெற்றார். அதன் பின்னர் அவர், அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்துக்கு சென்றார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று கொண்டு திமுக நிர்வாகிகள், தொண்டர்களிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். அப்போது, கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் அமைச்சர் துரைமுருகன் சென்று வாழ்த்தினார். அப்போது அவரது காலில் விழுந்து உதயநிதி ஸ்டாலின் ஆசி பெற்றார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஜெகத்ரட்சகன், திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
* இல்லந்தோறும் உறுப்பினர் சேர்ப்பு பணி
மேலும், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும் மாபெரும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் ஆதரவற்ற நிலையங்களில் காலை, மதியம் உணவு வழங்கப்பட்டது. மேலும் பல்ேவறு விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டன. மேலும் இல்லந்தோறும் சென்று உறுப்பினர் சேர்த்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. அது மட்டுமல்லாமல் நேற்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை திமுகவினர் வழங்கினர். இதே போல மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
* தொலைபேசியிலும் வாழ்த்து
பிறந்த நாள் கொண்டாடிய உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலரும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். போலீஸ் கமிஷனர் அருண் நேற்று மாலை, உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
The post 47வது பிறந்த நாளை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து உதயநிதி வாழ்த்து பெற்றார்: அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார் appeared first on Dinakaran.