இதுகுறித்து, தகவலறிந்த பண்டிதமேடு பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டதால் காரில் வந்த 4 மாணவர்களும் தப்பி ஓட முயன்றனர். அப்போது, கல்லூரி மாணவர்களான சித்தாலபாக்கத்தை சேர்ந்த ஜோஷ்வா, திருமுல்லை நகர் பெருங்குடி பகுதியை சேர்ந்த ஒரு மாணவன் என 2 பேரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். மற்ற 2 மாணவர்கள் தப்பியோடி விட்டனர். பின்னர், விரைந்து வந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொதுமக்களிடம் இருந்து 2 மாணவர்களையும் மீட்டு ஒரு காரில் அமர வைத்தனர்.
அப்போது, பொதுமக்கள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் அந்த காரை சுற்றி நின்று காரில் இருக்கும் 2 மாணவர்கள் மற்றும் தப்பியோடிய 2 மாணவர்களை உடனடியாக பிடித்து வந்து எங்களிடம் ஒப்படையுங்கள் என போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அப்பகுதி இளைஞர்கள் திடீரென ஓஎம்ஆர் சாலையில் அமர்ந்து இறந்தவர்களின் உடல்களை ஆம்புலன்சில் ஏற்ற விடாமல் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு சப்-கலெக்டர் நாராயண சர்மா, செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி சாய்பிரணீத் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
* சாவிலும் இணைபிரியாத தோழிகள்
கார் விபத்தில் இறந்த தோழிகள் 5 பேரும் சுபநிகழ்சிகள் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கு சென்றாலும் சேர்ந்துதான் செல்வார்களாம். இணைபிரியாத தோழிகளாக இருந்த இவர்கள் 5 பேரும் இணைபிரியாமல் விபத்தில் பலியான சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.
* தாயின் உடலை மடியில் வைத்து கதறிய மகன்
கார் ஏறி இறங்கிய விபத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த 5 பெண்களும் கண் இமைக்கும் நேரத்தில் பலியாகினர். இந்த, விபத்தில் உயிரிழந்த தனது தாயின் உடலை தூக்கி மடியில் வைத்து மகன் கதறி அழுத சம்பவம் பார்ப்போர் கண்களில் கண்ணீர் வரவைத்தது.
* உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் தலா ரூ.2 லட்சம் அறிவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: பழைய மாமல்லபுரம் சாலை, பையனூர் மதுரா பண்டிதமேடு சந்திப்பில் நேற்று கார் மோதி சாலையோரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந் 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post மாமல்லபுரம் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது கார் மோதியதில் 5 பெண்கள் உடல் நசுங்கி சாவு: கல்லூரி மாணவன் கைது, 2 பேர் தப்பியோட்டம் appeared first on Dinakaran.