பண்ருட்டி அருகே பரபரப்பு வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் தாலி செயின் பறிப்பு

*அடுத்தடுத்து 3 இடங்களில் கைவரிசை

பண்ருட்டி : வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் தாலி செயினை பறித்ததுடன், அடுத்தடுத்து 3 இடங்களில் மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே புலவனூரை சேர்ந்தவர் எம்ஆர் என்ற ராஜாமணி(60). இவரது சொந்த ஊர் மேல்குமாரமங்கலம். கண்டரக்கோட்டையில் டீக்கடை நடத்தி வந்ததால், குடும்பத்துடன் புலவனூரில் வசித்து வருகிறார்.

வழக்கம்போல் நேற்றுமுன்தினம் இரவு டீக்கடை வியாபாரம் முடித்து, ராஜாமணி, அவரது மனைவி சரோஜா ஆகியோர் புலவனூரில் உள்ள வீட்டில் தூங்கியுள்ளனர்.இதையடுத்து நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சரோஜா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி செயினை பறித்துள்ளார். அவர் கண்விழித்து கூச்சல்போடும் முன் பறித்த செயினுடன் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

மேலும், அதே பகுதியை சேர்ந்த கொத்தனாரான முருகன்(39) என்பவரது வீட்டில் புகுந்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள குத்து விளக்கை திருடி சென்றனர். இதேபோல செல்வமணி வீடு, அன்பழகன் ரைஸ் மில் ஆகிய இடங்களிலும் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

4 இடங்களிலும் மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது. இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி இன்ஸ்பெக்டர் வேலுமணி, குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி ராஜா உத்தரவின் பேரில், தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள், தடைய அறிவியல் நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் 4 இடங்களில் மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பண்ருட்டி அருகே பரபரப்பு வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் தாலி செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: