* 3 திருமணம் செய்த கட்டிட மேஸ்திரி
* இருவரை பிடித்து போலீசார் விசாரணை
வானூர் : திருவக்கரை கல்குவாரியில் சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது. இது சம்பந்தமாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருவக்கரை பகுதியில் உள்ள கல்குவாரி பள்ளத்தில் ஆண் சடலம் ஒன்று தலை மற்றும் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த 23ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. வானூர் போலீசார் சடலத்ைத கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் விழுப்புரம் எஸ்பி தீபக் சிவாச் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தொடர்ந்து 4 நாட்கள் பல்வேறு பகுதியில் விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு கொலையானவர் திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. இதையடுத்து அந்த காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு தனிப்படையினர் விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில், துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டவர் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகா சரவணன்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜதுரை (30) என்பதும் கட்டிட மேஸ்திரி என்பதும் தெரியவந்தது. இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. மேலும் இவர் முதல் மனைவியை பிரிந்து கஸ்தூரி என்ற பெண்ணை காதலித்து 2வது திருமணம் செய்ததும், பின்னர் அவரையும் பிரிந்து கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணை 3வது திருமணம் செய்துள்ளார்.
இதில் ஒரு குழந்தை உள்ளதும் ெதரியவந்தது. ராஜதுரை கடந்த 2012ம் ஆண்டு கிளியனூர் அருகே கொந்தமூர் பகுதியில் செங்கல் சூளை வேலைக்கு சென்றபோது அந்த பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கர்ப்பம் ஆக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் கிளியனூர் போலீசார் ராஜதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் பெயிலில் வந்தவர் தலைமறைவானதால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு கிளியனூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டுள்ளார். ராஜதுரைக்கும், அவரது சொந்த ஊரில் சிலருக்கும் பிரச்னை இருந்துள்ளது. மேலும் பல்வேறு பெண்களிடம் தவறான முறையில் நடந்துள்ளதால் கிராமத்தில் விரோதம் இருந்துள்ளதும், சம்பவத்தன்று 5 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் வெட்டி கொலை செய்து அங்கிருந்து வாகனத்தின் மூலம் திருவக்கரை பகுதியில் உள்ள கல்குவாரியில் வீசிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் 2 பேரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாளம் கண்டது எப்படி?
இறந்த ராஜதுரை கடந்த 10 தினங்களுக்கு முன்பு காணாமல்போனதையடுத்து அவருடைய தாயார் விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தார். இதையடுத்து ராஜதுரை உடல் கண்டெடுக்கப்பட்ட படத்தை காவல்துறையினர் விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி ஒட்டப்பட்டது. இதையறிந்த விழுப்புரம் போலீசார் ராஜதுரை தயார் கொடுத்த அடையாளங்களின் அடிப்படையில் இறந்தவர் ராஜதுரையாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர்.
இதையடுத்து அவர் பயன்படுத்திய செல்போன் எண்ணுக்கு யார், யார் தொடர்பு கொண்டார்கள் என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்தபோது 2 பேர் இறந்த ராஜதுரை போன் நம்பருக்கு தொடர்பு கொண்டது தெரியவந்தது. அதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டது ராஜதுரை தான் என்பது தெரியவந்தது. ராஜ துரையை கொலை செய்து துண்டிக்கப்பட்ட தலை மற்றும் கை, கால்கள் எங்கே வீசப்பட்டது என்பது குறித்து பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருவக்கரை கல்குவாரியில் தலை, கை, கால் துண்டிக்கப்பட்டு சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது appeared first on Dinakaran.