அச்சு முறித்து ஆட்கொண்டவர்
தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய அசுரர்களை அழிக்க, ஈசன் தேரில் சென்றார். உடன் அவருடைய படையினர். தன் துணை இல்லாமல் யாருக்கும் எந்த காரியமும் சித்தியாகாது என்பதை உணர்த்த விரும்பிய ஆனைமுகன், தன் நீள் கரங்களால் தேரின் அச்சை நறுக்கென்று ஒடித்தார். ஈசன் உட்பட அனைவரும் தவறு செய்துவிட்டோமே என தவித்தனர். கைகூப்பி தம் தவறை மன்னிக்கச் சொல்லி அவர்கள் வேண்டிக் கொண்டபோது, அந்தக் கருணை நாயகன், ஒரு பெருஞ் சக்தியை அவர்களுக்குள் ஓடவிட்டார். இப்போது தேர் சீராகி இன்னும் அதீத பலத்தோடு புறப்பட்டது. தேரின் வேகத்திற்கும் மேலாக விநாயகனின் அருள் உடன் வந்தது. திரிபுரம் இறங்கி அசுரப் பெருங்கூட்டத்தைப் பார்த்தார் ஈசன். அவரது கோபக்கனலின் மத்தியில் விநாயகன் தோன்ற, அதைக் கண்ட அசுரர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். அந்தக் கனல் திரிபுரத்தை எரித்தது. ஈசன் திரிபுராந்த கனாய் திகழ்ந்தார். அச்சு முறிந்து இரு பாகமானதால் இத்தலம் ‘அச்சிறுப்பாக்கம்’ என்றாகியது. இந்த விநாயகர், ஆட்சீஸ்வரர் கோயிலுக்குச் சற்று வெளியே ‘அச்சுமுறி விநாயகர்’ எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். நம் வாழ்வெனும் தேரை எந்தத் தடங்கலும் இன்றி அழகாக ஓடச்செய்கிறார். அச்சிறுப்பாக்கம், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகேயுள்ளது.
The post உருவ – அருவ விநாயகர் appeared first on Dinakaran.