விகேபுரம் : விகேபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் இருந்து தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில் குழாய்களை நகராட்சி நிர்வாகம் அதிரடியாக அகற்றியது மட்டுமின்றி அபராதம் விதித்தது.
தொடர்ந்து கழிவு நீர் கலப்பது தெரிய வந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.விகேபுரம் நகராட்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களில் இருந்து கழிவு நீரினை மழைநீர் வடிகால் வழியாக தாமிரபரணி ஆற்றில் விடுவதாக தெரிகிறது.
இது குறித்து தொடரப்பட்ட வழக்கின் பேரில், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து கழிவு நீரை தங்களது வளாகத்திற்குள் தாங்களாகவே முறையாக கையாள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாய சிறப்பு அமர்வு சுட்டிகாட்டியது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் அறிவுரை வழங்கியும் குடியிருப்புவாசிகள், வணிக வளாகத்தில் கடை வைத்திருப்போர் தொடர்ந்து கழிவு நீரை தாமிரபரணி ஆற்றில் திறந்து விட்டனர்.
இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தாமிரபரணி ஆற்றில் நேரடியாக கழிவு நீர் கலப்பதை நிறுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து கழிவு நீரை கால்வாயில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கா விட்டால் அபராதம் விதிப்பது மட்டுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று விகேபுரம் நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அதையும் மீறி வீடுகள், கடைகள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் இருந்து குழாய்கள் மூலம் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் திறந்து விடுவது தெரியவந்தது.
இதைதொடர்ந்து நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனின் அறிவுறுத்தலின்படி, நகராட்சி தலைவர் செல்வசுரேஷ் பெருமாள் மேற்பார்வையில் விகேபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கும் இடங்களில் உள்ள குழாய்களை நகராட்சி நிர்வாகம் அகற்றும் பணியில் நேற்று முதல் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக விகேபுரம், பாபநாசம் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதி மற்றும் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் கழிவுநீர் தாமிரபரணி ஆற்றில் கலப்பதற்காக வைக்கப்பட்டிருந்த குழாய்களை நகராட்சி மேலாளர் கணேசன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார் ஆகியோர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். அத்துடன் அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து கழிவு நீரை திறந்து விடுவது கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று விகேபுரம் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் கூறுகையில், ‘தொடர்ச்சியாக தாமிரபரணி ஆற்றில் அல்லது வாய்க்கால்களில் கழிவு நீரை விடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும். ஆகவே கழிவுநீர் கலப்பதற்கான குழாய்களை அவர்களே துண்டித்து விட வேண்டும். தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள் திருமண மண்டபம் மற்றும் வீடுகளுக்கு சென்று சோதனையில் ஈடுபடுவார்கள்’ என்றார்.
The post விகேபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கழிவுநீர் தாமிரபரணி ஆற்றில் கலப்பதை தடுக்க நடவடிக்கை appeared first on Dinakaran.