இடைப்பாடி அருகே மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் பணி நீக்கம்

*கல்வி அதிகாரி நேரில் விசாரணை

சங்ககிரி : இடைப்பாடி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தற்காலிக தமிழாசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். சம்பவம் குறித்து சங்ககிரி கல்வி மாவட்ட அதிகாரி நேரில் விசாரித்தார்.

சேலம் மாவட்டம் இடைப்பாடி பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி, அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த 23ம் தேதி காலை சிறப்பு வகுப்பு இருப்பதாக கூறி பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து மதியம் 12.45 மணியளவில் அழுது கொண்டே வீடு திரும்பியுள்ளார். இதனால், திடுக்கிட்ட பெற்றோர் விவரம் கேட்டுள்ளனர்.

அப்போது, பள்ளி வராண்டாவில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த சமயத்தில் தமிழாசிரியர் பிரகதீஸ்வரன் வந்து, தவறான எண்ணத்தில் சுடிதாரின் பின்புற டாப்பை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்தார்.

இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் தெரிவித்தனர். அதில், தங்களது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தமிழாசிரியர் பிரகதீஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

இதன்பேரில், இன்ஸ்பெக்டர் பேபி, விசாரித்து போக்சோ சட்டத்தின் கீழ் பிரகதீஸ்வரனை நேற்று கைது செய்தார். பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையிலடைக்கப்பட்டார். இதுகுறித்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகத்தினர் உடனடியாக பள்ளியில் தற்காலிக தமிழாசிரியராக பணியாற்றிய பிரகதீஸ்வரனை பணிநீக்கம் செய்தனர்.

இதனையடுத்து, நேற்று சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பெருமாள் மற்றும் பள்ளி துணை ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post இடைப்பாடி அருகே மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் பணி நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: