சென்னையின் முக்கிய சாலைகளில் உள்ள 825 பேருந்து நிழற்குடைகளை ரூ.30 கோடியில் சீரமைக்கும் பணி: டெண்டர் கோரியது மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 825 பேருந்து நிழற்குடைகளை சீரமைக்க ரூ.30 கோடி மதிப்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 418 கி.மீ நீளத்துக்கு 488 பேருந்து தட சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் 1,265 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இதில் மாநகராட்சி சார்பில் நவீன நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான நிழற்குடை பகுதிகள் அசுத்தமாக காணப்பட்டன. பல இடங்களில் போதை ஆசாமிகள், மனநலம் பாதிக்கப்பட்டோர் நிரந்தரமாக வசிக்குமிடமாகவும் நிழற்குடைகள் மாறியுள்ளன. நவீன நிழற்குடைகளில் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு அலங்கோலமாக காட்சியளிக்கின்றன. இந்த பேருந்து நிறுத்தங்களில் சுமார் 700 நிறுத்தங்கள் ஒப்பந்ததாரர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இவைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் சென்னை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பொதுமக்களும் பல புகார்களை சென்னை மாநகராட்சிக்கு அனுப்பி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி, பேருந்து நிழற்குடைகளை பராமரிக்க முடிவு செய்து அதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதவது: சென்னையில் உள்ள 825 பேருந்து நிழற்குடைகளை சீரமைக்க ரூ.30 கோடியில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் துருபிடிக்காத எக்குவால் இருக்கை, டிஜிட்டல் விளம்பர பலகைகள் அமைக்கப்படும். இருக்கைகள் ஒவ்வொன்றும் 2 அடி உயரத்தில் இருக்கும். ஒப்பந்ததாரர் பேருந்து நிழற்குடையை 8 ஆண்டுகளுக்கு பராமரிப்பார்.

குறிப்பாக திருவொற்றியூர், கிண்டி ஜிஎஸ்டி சாலை, அண்ணாநகர் 2வது அவென்யூ, பெசன்ட் நகர் போன்ற முக்கிய பகுதிகளில் நிழற்குடைகள் சீரமைக்கப்படும். கோடம்பாக்கம், உத்தமர் காந்தி சாலை, ஆற்காடு சாலை, லூப் ரோடு போன்ற இடங்களில் மெட்ரோ ரயில் நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த இடங்களில் சென்னை மாநகராட்சியே நிழற்குடை அமைக்கும். பேருந்து நிழற்குடைகளில் விளம்பரம் செய்வதால் மாநகராட்சியின் வருவாய் உயரும். கடந்த 2015ல் 400 பேருந்து நிழற்குடைகளை பராமரிக்க தனியார் நிறுவனம் ஒன்று டெண்டர்களை எடுத்தது. அவர்கள் சரியாக பராமரிக்காததால் சென்னை மாநகராட்சிக்கு ரூ.46.25 லட்சம் ஆண்டு வருமானம் நஷ்டம் ஏற்பட்டது. மொத்தம் ரூ.416 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அது போன்று இந்த முறை முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post சென்னையின் முக்கிய சாலைகளில் உள்ள 825 பேருந்து நிழற்குடைகளை ரூ.30 கோடியில் சீரமைக்கும் பணி: டெண்டர் கோரியது மாநகராட்சி appeared first on Dinakaran.

Related Stories: