இந்திய அதிகாரிகளுக்கு ₹2,100 கோடி லஞ்சம் கொடுத்த புகார்; அதானிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதால் பரபரப்பு

புதுடெல்லி: இந்திய அதிகாரிகளுக்கு ₹2,100 கோடி லஞ்சம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதானி குழுமத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரபல கவுதம் அதானி, துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான இவர் மீது அமெரிக்க செக்யூரிட்டி கவுன்சில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. அதாவது அமெரிக்காவில் சூரிய சக்தி திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன.

அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் சுமார் 265 மில்லியன் டாலர்களை (ரூ.2,100 கோடி) லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு வழங்க ஒப்புக்கொண்டதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் ஈட்டும் ஒப்பந்தத்தை அவர்கள் பெற முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குற்றச்சாட்டை அடுத்து நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்தத் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்த ‘வால் ஸ்ட்ரீட்’ (அமெரிக்க பங்குச்சந்தை) முதலீட்டாளர்களை அதானி குழுமம் ஏமாற்றி உள்ளது என ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தச் செய்தியை அடுத்து அதானி க்ரீன் எனர்ஜி பத்திரங்கள் மூலம் சுமார் 600 மில்லியன் டாலர்களை திரட்டும் திட்டத்தை ரத்து செய்தது. இந்த விவகாரம் குறித்து அதானி குழுமம் எந்தவித விரிவான விளக்கத்தையும் இதுவரை தரவில்லை. இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அதானி மற்றும் சாகர் அதானி இல்லத்திற்கு அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

அதில், 21 நாட்களுக்குள் நேரில் பதிலளிக்க வேண்டும் என்றும், பதிலளிக்கத் தவறினால் புகாரில் கோரப்பட்ட நிவாரணத்திற்கு எதிராக தீர்ப்பு அளிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘ஏற்கனவே ஹிண்டன்பர்க் அறிக்கையின்படி அதானி குழுமம் மீது பங்குச்சந்தை வர்த்தக முறைகேடு புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சமயத்தில் அமெரிக்காவில் சூரிய சக்தி திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

அவர்களுக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இவையெல்லாம் அதானி நிறுவனம் மீதான சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது. எனவே தேசநலன் கருதி அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். ஹிண்டன்பர்க் வழக்குடன் இந்த புதிய மனுவையும் சேர்த்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட புதிய மனுவானது உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post இந்திய அதிகாரிகளுக்கு ₹2,100 கோடி லஞ்சம் கொடுத்த புகார்; அதானிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: