கேப்டனாக கபில்தேவ் போல் செயல்பட விரும்புகிறேன்: பும்ரா பேட்டி


பெர்த்: இந்தியா -ஆஸ்திரேலியா இடையே 5 டெஸ்ட் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் பெர்த்தில் இன்று தொடங்கியது. இதில் இந்தியஅணியின் கேப்டனாக களம் இறங்கிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அளித்த பேட்டி: “வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டனாக செயல்பட வேண்டும் என்பதற்கு நான் எப்போதும் ஆதரவு கொடுத்துள்ளேன். கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த காலங்களில் நிறைய ரோல் மாடல்கள் இருக்கிறார்கள். கபில்தேவ் போன்ற நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் கடந்த காலங்களில் கேப்டன்ஷிப் ரோல் மாடல்களாக செயல்பட்டுள்ளார்கள். அதே போல நாமும் புதிய கலாச்சாரத்தை துவங்குவோம் என்று நம்புகிறேன். 3-0 என நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வி இந்திய அணியை பாதிக்காது. ஒருவேளை நீங்கள் அந்த தொடரில் வெற்றியை சந்தித்திருந்தாலும் இங்கே 0-லிருந்து தான் இத்தொடரை துவங்க வேண்டும்.

தோல்வியை சந்தித்தாலும் நீங்கள் ஜீரோவில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். அது தான் கிரிக்கெட்டின் அழகாகும். டி20 உலகக் கோப்பை வென்றதால் மற்ற தொடர்களில் நாங்கள் திருப்தியடைவோம் என்று அர்த்தமல்ல. கண்டிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான கடினமான தொடரில் நாங்கள் ஏமாற்றத்தை சந்தித்திருந்தோம். ஆனால் அங்கிருந்து நாங்கள் எந்த பளுவையும் எடுத்து வரவில்லை. தற்போது புத்துணர்ச்சியுடன் இங்கே நாங்கள் வித்தியாசமான மனநிலையுடன் வந்துள்ளோம். இந்தியாவில் சந்தித்த தோல்வியிலிருந்து நாங்கள் எந்த பொருளையும் எடுத்து வரவில்லை. நாங்கள் இங்கே நேர்மறையுடன் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வெற்றிபெற முயற்சிப்போம், என்றார்.
ஆஸ்திரேலியா பத்திரிகையாளர் ஒருவர், ஒரு மித வேகப்பந்துவீச்சாளராக இந்திய அணியை வழிநடத்துவது எப்படி இருக்கிறது என கேள்வியை எழுப்பினார்.

அதற்கு எந்த டென்ஷனும் இல்லாமல் பும்ரா, பாஸ்… என்னால் 150 கிமீ வேகத்தில் பவுலிங் செய்ய முடியும். குறைந்தபட்சம் என்னை வேகப்பந்துவீச்சாளர்கள் என்றாவது அழைக்கலாம் என்று பதில் அளித்தார். தொடர்ந்து, என்னை ஒரு ஃபாஸ்ட் பவுலிங் கேப்டனாக பார்க்கவில்லை. ஒரு இந்திய வீரராக எனது கடமை என்று நினைத்து, இந்திய அணிக்கு எது சிறந்ததோ அதனை செய்ய வேண்டும். இந்திய அணியை அடுத்த லெவலுக்கு உயர்த்த வேண்டும் என்பதே நோக்கம், என்றார்.

இந்திய அணியில் இணையும் ரோகித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித்சர்மா-ரித்திகா தம்பதிக்கு கடந்த வாரம் 2வதாக ஆண் குழந்தை பிறந்தது. மனைவியின் பிரசவத்தின் போது உடன் இருக்க விரும்பிய ரோகித்சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இருந்து விலகினார். இந்நிலையில் அவர் நாளை ஆஸ்திரேலியா புறப்படுகிறார். 24ம் தேதி அவர் பெர்த்தில் இந்திய அணியுடன் இணைய உள்ளார்.

The post கேப்டனாக கபில்தேவ் போல் செயல்பட விரும்புகிறேன்: பும்ரா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: