ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச் சுற்று இந்தியா-கத்தார் பலப்பரீட்சை

சென்னை: ஆசிய கோப்பை ஆண்கள் கூடைப்பந்து போட்டி 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடக்கிறது. இந்தப் போட்டியில் விளையாடும் 16 நாடுகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் 24 ஆசிய நாடுகள் பங்கேற்றுள்ளன.  இதில் இந்தியா இடம் பெற்றுள்ள இ பிரிவில் ஈரான், கஜகஸ்தான், கத்தார் ஆகிய நாடுகள் உள்ளன. இப்பிரிவில் உள்ள ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளுடன் தலா 2முறை மோத வேண்டும்.

இதுவரை ஆடிய 2 ஆட்டங்களில் கஜகஸ்தான், ஈரான் அணிகளிடம் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது.தொடர்ந்து 3வது ஆட்டத்தில் கத்தாருடன் இன்று மோத உள்ளது. சென்னை நேரு உள்ளரங்கில் இந்த ஆட்டம் நடைபெறும். ஏற்கனவே 2 ஆட்டங்களில் தோற்றுள்ள இந்தியா எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே அடுத்தச் சுற்று வாய்ப்பு குறித்து யோசிக்க முடியும். அதே நிலைமையில்தான் கத்தாரும் உள்ளது. தான் விளையாடிய 2 ஆட்டங்களிலும் ஈரான், கஜகஸ்தானிடம் தோல்வியை சந்திந்திருக்கிறது.

ஆனாலும் நூலிழையில்தான் வெற்றி வாய்ப்புகளை நழுவ விட்டிருக்கிறது. எனினும் உள்ளூரில் நடப்பதால் இந்தியா வெல்வதற்கான வாய்ப்பு அதிகம். பாலதனேஷ்வர் பொய்யாமொழி, அரவிந்த்குமார் முத்துகிருஷ்ணன் தமிழ்நாட்டு வீரர்கள் அணியில் இடம் பெற்றிருப்பது உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். கூடவே இந்தியா(76வது ரேங்க்) உலக தரவரிசையில் கத்தாரை(101வது ரேங்க்) முன்னணியில் உள்ளது இன்னொரு சாதகமான அம்சம். எனினும் கத்தாரை குறைத்து மதிப்பிட முடியாது. அதனால் முதல் வெற்றிக்கு இரு அணிகளும் வேகம் காட்டும். எனவே ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

The post ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச் சுற்று இந்தியா-கத்தார் பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Related Stories: