அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிய 3 சென்னை ஐயப்ப பக்தர்கள்: சபரிமலை செல்லும் வழியில் பரபரப்பு


திருவனந்தபுரம்: சபரிமலை செல்லும் வழியில் நேற்று மாலை சென்னையை சேர்ந்த 3 பக்தர்கள் அடர்ந்த உள் வனப்பகுதியில் சிக்கினர். இது குறித்து அறிந்த பேரிடர் மீட்புப் படை, போலீஸ் மற்றும் வனத்துறையினர் அவர்களை மீட்டு சன்னிதானத்திற்கு கொண்டு வந்தனர். சபரிமலை தரிசனத்திற்கு புல்மேடு வனப்பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டருக்கு மேல் வனப்பகுதி வழியாக சபரிமலைக்கு நடந்து செல்ல வேண்டும். செல்லும் வழியில் வனத்துறை சார்பில் ஆங்காங்கே பக்தர்களுக்காக உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இங்கு குடிநீர், சிற்றுண்டி கிடைக்கும். சபரிமலை செல்லும்போது திசை மாறி சென்றால் பக்தர்கள் உள் வனப் பகுதிக்குள் சிக்கிவிடுவார்கள் என்பதாலும், வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதாலும் இந்தப் பாதையில் வனத்துறையினர் ரோந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று சென்னையைச் சேர்ந்த லட்சுமணன் (40), கோடீஸ்வரன் (40), வருண் (20) ஆகியோர் அடங்கிய 20 பேர் கொண்ட குழுவினர் புல்மேடு வழியாக சன்னிதானத்திற்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது லட்சுமணன், கோடீஸ்வரன், வருண் ஆகியோருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் 3 பேரும் பின் தங்கினர். 3 பேரும் வருவார்கள் என்று கருதிய மற்ற அனைவரும் சென்றுவிட்டனர்.

இதற்கிடையே வழி தெரியாமல் 3 பேரும் உள் வனப்பகுதிக்குள் சென்று விட்டனர். நீண்ட நேரமாக அவர்கள் வராததால் சன்னிதானத்திற்கு வந்த மற்ற பக்தர்கள் இதுகுறித்து போலீசிடம் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார், வனத்துறையினர், பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். நீண்ட நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு உள் வனப்பகுதியில் சிக்கிக்கொண்ட 3 பேரையும் அவர்கள் மீட்டு சன்னிதானத்திற்கு அழைத்து வந்தனர். நீண்ட நேரமாக வனப்பகுதியில் சிக்கியதாலும், பயந்திருந்ததாலும் அவர்களுக்கு சன்னிதானம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் தரிசனம் செய்துவிட்டு இன்று சென்னைக்கு திரும்பினர்.

The post அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிய 3 சென்னை ஐயப்ப பக்தர்கள்: சபரிமலை செல்லும் வழியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: