சட்டீஸ்கர் வனப்பகுதியில் 10 நக்சல்கள் சுட்டுக் கொலை : பாதுகாப்புப் படை அதிரடி

சுக்மா : சட்டீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல் ஆதிக்கம் நிறைந்த சுக்மா மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே மோதல் நடந்தது. அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து பஸ்தார் காவல் கண்காணிப்பாளர் பி.சுந்தர்ராஜ் கூறுகையில், ‘சுக்மா மாவட்டத்தின் தெற்கு பகுதியில் மாவட்ட ரிசர்வ் படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே மோதல் நடந்தது. அப்போது நடத்தப்பட்ட என்கவுன்டரில் 10 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே 47, எஸ்எல்ஆர் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையை தொடர்ந்து அப்பகுதியில் தொடர் தேடுதல் வேட்டை நடக்கிறது’ என்றார். சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஜனவரி முதல் இதுவரை மொத்தம் 257 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்; 861 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 789 பேர் சரணடைந்துள்ளனர். அதேசமயம் நக்சலைட் தாக்குதல்களால் ஏற்படும் இறப்புகள் 90% குறைந்துள்ளன என்று பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.

The post சட்டீஸ்கர் வனப்பகுதியில் 10 நக்சல்கள் சுட்டுக் கொலை : பாதுகாப்புப் படை அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: