மதுரை: அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி தரப்படவில்லை என தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சகம் கடந்த சில தினங்களுக்கு முன், 1957ம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டப்படி முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் நான்காவது ஏலத்தை நடத்தியது. அதில், மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டி மற்றும் ஆந்திர மாநிலம் பாலேபாளையம் ஆகிய பகுதிகளில் வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட், டங்ஸ்டன் கனிமத்தை வெட்டி எடுக்கும் உரிமையை பெற்றது. இதை செயல்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனம் தரப்பில், தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட 15 விதமான சான்றிதழ்கள் பெற ஏலத்தின் விதிகளில் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நடக்க உள்ள திட்டத்திற்கு ‘நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம தொகுதி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் வெள்ளாளபட்டி, அரிட்டாபட்டி, கூலானிபட்டி, நரசிங்கம்பட்டி, நாயக்கர்பட்டி மற்றும் மேலூரைச் சுற்றியுள்ள முக்கிய கிராமங்களில் 2,015.51 ஹெக்டேர் (5 ஆயிரம் ஏக்கர்) பரப்பளவில் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அரிட்டாபட்டியை, தமிழ்நாடு அரசு கடந்த 2022ல் பல்லுயிர் மரபு தலமாக அறிவித்தது. இங்கு நூற்றுக்கணக்கான அரிய வகை பறவைகள், விலங்குகள் உள்ளன. மேலும், தொடர்ச்சியாக 7 மலைத்தொடர்களும் அமைந்துள்ளன. சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.
ஒன்றிய அரசின் முடிவால் பல்லுயிர் மரபுத் தலம் மட்டுமின்றி, மரபு தலம் அமைந்துள்ள மலைப்பகுதியின் நான்கு திசைகளிலும் உள்ள கிராமங்களின் விளைநிலங்கள், தடுப்பணைகள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆகியவையும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படையும். மேலும், சுற்றுச்சூழல் பாதிக்குமென கூறப்படுகிறது. இதனால் டங்ஸ்டன் சுரங்க அனுமதி வழங்கிய ஒன்றிய அரசை கண்டித்தும், இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும் அரிட்டாபட்டி உள்ளிட்ட 48 கிராமங்களை சேர்ந்த மக்கள் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளனர். இந்நிலையில், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி தராது என வனத்துறை அமைச்சர் பொன்முடி நேற்று கூறியிருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘‘ஒன்றிய அரசால் கடந்த, ஜூன் 24ல் மேலூர் தாலுகாவுக்குட்பட்ட நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிமத்திற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்க குத்தகை உரிமம் வழங்க ஏல அறிவிப்பு செய்யப்பட்டது. இம்மாதம், 7ம் தேதி இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தை தகுதியான நிறுவனமாக சுரங்க அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அந்நிறுவனத்திடமிருந்து தமிழ்நாடு அரசுக்கு எந்த விண்ணப்பமும் வரவில்லை. அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.