*கடும் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
கூடங்குளம் : கூடங்குளம் ஊராட்சியில் பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை கால்நடைகள் சாப்பிடுவதால் பாதிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது. கூடங்குளம் ஊராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஊராட்சியின் 30 தூய்மை பணியாளர்கள் 15 தள்ளுவண்டிகள், 2பேட்டரி வாகனங்களின் உதவியுடன் தினமும் வீடுகள், கடைகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர்.
ஆனால் பொதுமக்கள், வியாபாரிகள் சிலர் குப்பைகளையும், இறைச்சி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளையும் பொது இடங்களில் கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை கால்நடைகள் சாப்பிடுவதால் பாதிப்புகள் ஏற்படுகிறது.
இதையடுத்து கூடங்குளம் ஊராட்சி சார்பில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டாதீர்கள் என்று 27 இடங்களில் விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் குப்பைகளை கொட்ட வேண்டாம், உங்கள் இல்லம் தேடி வரும் தூய்மை காவலர்களிடம் குப்பைகளை வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் தொடர்ந்து பொது இடங்களில் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து ஊராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘கூடங்குளம் பகுதியில் பொதுமக்களிடம் குப்பைகளை பொது இடங்களில் கொட்டவேண்டாம். வீடு தேடி வரும் தூய்மை காவலர்களிடம் குப்பைகளை வழங்குமாறு ஊராட்சி சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் சிலர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றனர். இதனால் தொற்றுநோய் பரவியது. இதையடுத்து கடந்த மாதம் மாவட்ட சுகாதார அதிகாரி மருத்துவர் கீதாராணி தலைமையில் மருத்துவ குழுவினர் கூடங்குளம் ஊராட்சி முழுவதும் சுகாதார பணிகளையும், வீடுகளில் தூய்மைப் பணிகளையும் குப்பைகளை அகற்றும் பணிகளையும் ஒரு வாரம் மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக ராதாபுரம் பிடிஓக்கள் உலகம்மாள், அலெக்ஸ் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கூடங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகளை கொட்டாதீர்கள் வாசகம் கொண்ட அறிவிப்பு பலகையை வைக்கப்பட்டது. அதையும் மீறி குப்பைகள் கொட்டும் பொதுமக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.
The post கூடங்குளம் ஊராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பலன் இல்லை பொது இடங்களில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.