நோய் நாடி

நன்றி குங்குமம் டாக்டர்

பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு

முதுமையில் இளமை!

ஆதிகாலம் முதல் மனிதர்களின் ஆரோக்கியம் மற்றும் ஆயுள் என்பது மிகவும் சிக்கலானதாக இருந்தது. ஏனென்றால், மருத்துவத்துறை வளர்ச்சியடையும் வரை பெரும்பாலும் மனிதர்களின் ஆயுட்காலம் என்பது இருபது வயது முதல் நாற்பது வயது வரையே இருந்திருக்கிறது. இதனால் மனிதன் அவனது இளமையையும், வளர்ந்த நிலை பருவத்தையும் பார்க்காமல் மரணித்த மனிதர்கள்தான் அதிகம் என்று நம்முடைய வரலாறு சொல்கிறது.

ஆனால், இன்றைய நவீன மருத்துவத்துறை வளர்ச்சியாலும் மற்றும் மக்களின் விழிப்புணர்வாலும் மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரித்திருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். மேலும், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மனிதர்களின் ஆயுட்காலம் நாற்பது வயதிலிருந்து அறுபத்து ஏழு வயது வரை உலகளவில் அதிகரித்திருக்கிறது என்று கூறுகிறது.

பெரும்பாலும், மனிதர்களுக்கு வயதாக வயதாக செல்களின் வயதும் அதிகமாகிக் கொண்டிருக்கும். உதாரணத்திற்கு, ஒருவர் அவருடைய உடல் மற்றும் மனநலன் மீது அதிக அக்கறையோடு கவனம் செலுத்தியிருப்பார். அதாவது, சரியான உணவு முறையுடன், சீரான தூக்கமும் இருக்கும் போது, அதனுடன் உடற்பயிற்சி மற்றும் மனரீதியாகவும் நிதானமான சூழலை அவரது வாழ்வியலில் கடைப்பிடித்தவராக இருப்பின், அவருக்கு அறுபது வயது என்று இருந்தாலும், அவரின் செல்லுக்கான வயது நாற்பதாக இருக்கும். அந்தளவிற்கு உடலும், மனமும் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்கும்.

இதுவே, நாற்பது வயதான ஒருவர், சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமல், உடற்பயிற்சி எதுவுமில்லாமல், குடிப்பழக்கம், தூக்கமின்மை, மனஅழுத்தம் என்று பலவகைப்பட்ட ஆரோக்கியமற்ற வாழ்வியலை வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவரது செல்களுக்கு சீக்கிரத்தில் வயதாகியிருக்கும். அதனால் தான், சிலர் வயது குறைவாக இருந்தாலும், வயதான தோற்றத்தில் பிரதிபலிப்பார்கள்.

இந்த ஆய்வின் படி, இன்றைக்கு இந்தியாவைப் பொறுத்தவரை மருத்துவத்தில் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களை முதியவர்கள் என்றும், உலகளவில் அறுபத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களை முதியவர்கள் என்றும் வரையறை செய்திருக்கிறார்கள்.

இத்தனை கொண்டாட்டமாக, சந்தோசமாக மனிதர்களின் ஆயுட்காலம் அதிகமாகி விட்டதை பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவத்துறையின் மீது, மக்களிடையே கொஞ்சம் சலசலப்பையும் உண்டாக்கி இருக்கிறது என்பதையும் நாம் மறுக்க முடியாது. ஏனென்றால், இந்தியாவைப் பொறுத்தவரை இளைஞர்கள் அதிகமாக வாழும் நாடாகும். இங்கு இளைஞர்களுக்கு உள்ள மரியாதை, முதியோர்களுக்கு குறைந்திருக்கிறது. முதியோர்கள் என்றாலே, அவர்கள் வீட்டில் சும்மா இருப்பவர்கள் அல்லது உழைக்க முடியாத நபர்கள் என்றளவில் தான் சமூகம் அவர்களை பார்க்க ஆரம்பித்திருக்கிறது.

உண்மையில், வயதானவர்களின் அனுபவம் நம் சமூகத்திற்கு இன்றியமையாதது. வாழ்க்கையில் ஒருவரின் வயது அறுபது அல்லது எழுபது என்பது வெறும் வயதல்ல. அவை அனைத்துமே நம் சமூகத்தின், பண்பாட்டின், நாகரீக வளர்ச்சியில், கலாச்சாரத்தில் அனைத்திலும் அனுபவமான நபர் என்றே கூற வேண்டும். அவர்கள்தான் இன்றைக்கு அதிகமாகத் தேவைப்படுகிறார்கள். இன்றைய நவீன சமூகத்தில் சிறு குழந்தைகள் முதல் வளர்ந்தவர்கள் வரை யாரைப் பற்றியும் சிந்திக்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

அம்மாதிரியான நேரத்தில், வீட்டிலுள்ள முதியவர்கள் அமைதியாக, வீட்டிலுள்ள அனைவரையும் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இதனால் நம் வீட்டில் யார் துறுதுறுவென்று இருக்கிறார்கள் என்றும், யார் சோகமாக, தனியாக ஒதுங்கி இருக்கிறார்கள் என்றும் தெரிந்து வைத்திருப்பார்கள். அதனால் வீட்டிலுள்ள மனிதர்களை நாம் கவனிக்க மறந்தாலும், பெரியவர்கள் அவர்களுடன் பேசி, அவர்களுடைய அனுபவங்கள் மூலம், எந்த பிரச்னையாக இருந்தாலும் எளிதாக மீட்டு எடுத்து விடுவார்கள். அல்லது குடும்பத்திற்கு தெரியப்படுத்துவார்கள். மேலும், நம் வீட்டு குழந்தைகள் கூட ஸ்ட்ரெஸா இருக்கேன் என்று கூறும் போது, பெரியவர்களுடன் பேசவிட்டால் போதும்.

குழந்தைகளுக்கு கதைகள் பலவற்றை கூறி, மனிதர்கள் மீதான நிறை குறைகளையும், வெற்றி, தோல்விகளையும் எடுத்துக் கூறி, அவர்களை முறையாக சமூகத்தை எதிர்கொள்ள தயார்படுத்துவார்கள். மேலும், அந்தந்த ஏரியாவில் இருக்கும் பெரியவர்களால், ஏரியாவுக்குள் தொடர்ந்து தேவையில்லாத நபர்கள் யார் வருகிறார்கள் என்பதையும் தெரியப்படுத்துவார்கள். தெருவில் இருக்கும் சிறு சிறு குறைகளைக் கூட எடுத்துக் கூறி, சரி செய்ய வைப்பார்கள். இதனால் நமது வீட்டிற்கு மட்டுமல்ல, நமது சமூகத்திற்கும் அவர்கள் மிகவும் தேவையானவர்கள் என்று கூறுவதை விட, அவர்கள் வாழ்வதற்கு உரிமையும், அதே சமயத்தில், அவர்களுக்கான மரியாதையும் கொடுக்க வேண்டும் என்பதே நிதர்சனம்.

இன்றைய இளைஞர்களுக்குத் திறமை இருக்கிறதா, சிந்தனைத்திறன் இருக்கிறதா, உறவுகளை கையாளத் தெரிகிறதா என்று பார்ப்பது போல், வாழ்க்கையில் அனுபவமுள்ள ஒரு நபர் அவர்களுடன் இருக்கிறாரா என்று யாரும் கேட்பதில்லை. அம்மாதிரியான அனுபவமிக்க மனிதர்களை காப்பது நமது கடமையென்று மருத்துவர்கள் புரிந்துவிட்டார்கள்.அதனால், ஜீரியாட்ரிக் மருத்துவம் என்பது முதியோர்நல மருத்துவப் பிரிவாக ஆரம்பித்து, உலகளவில் இவர்களின் மேல் தனிக்கவனம் செலுத்த தொடங்கி விட்டார்கள்.

அதிலும், நம்முடைய தமிழ்நாட்டில் முதியோர் நலத்திற்காக சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவமனையாக சென்னை கிண்டியில் இயங்குகிறது. இங்கு அலோபதி மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவ சிகிச்சை முறைகளும், பொது அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. முதியோர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு சென்னை தான் செல்ல வேண்டுமா என்றால், அப்படியில்லை. தமிழ்நாட்டில் பல அரசு மருத்துவமனைகளில், முதியோர்களுக்கான உள்நோயாளி பிரிவு மற்றும் வெளிநோயாளி பிரிவு என்று இருக்கிறது.

இத்தனை மருத்துவ சிகிச்சைகளும், முதியவர்களின் வயதை மீறி, அவர்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்வியலை உடல் மற்றும் மனரீதியாக வழங்க வேண்டுமென்பதே குறிக்கோளாகும். அதில் மருத்துவர்கள் அடிப்படையாக என்ன மாதிரியான சிகிச்சைகளை வழங்குகிறார்கள் என்று பாப்போம்.முதியோர்களுக்கு சிகிச்சை அளிப்பது என்பது மருத்துவர்களுக்கு மிகவும் சவாலான விஷயமாக இருக்கும். ஏனென்றால், முதியவர்கள் உடலில் ஒரு பிரச்னை என்று கூறினால், அதில் பல உள் அடுக்குகள் மறைமுகமாக கலந்திருக்கும். அதனால், முதியவர்களின் சிகிச்சையில், ஒன்றுக்கும் மேற்பட்ட சிகிச்சைகளை வழங்கும் முறையைத் தான் மருத்துவர்கள் தொடர்ந்து செயல்படுத்த வேண்டியதாக இருக்கும்.

உதாரணத்திற்கு, ஒரு முதியவரை மருத்துவரைப் பார்க்க அழைத்து வருகிறீர்கள். அதற்கு மருத்துவர், அவர்களுக்கென்று Geriatrics Comprehensive Assessment என்ற முறையில், சில கேள்விகளை கேட்பதன் மூலம் சிகிச்சையை ஆரம்பிப்பார். அதில் சில கேள்விகள் இதோ:

பெரியவர்களிடம் நாம் இயல்பாக கொஞ்சம் அதிக சத்தத்துடன் தான் பேசுவோம். அதனால் கண் பார்வையில் பிரச்னை மற்றும் காது கேட்பதில் பிரச்னை இருந்தால் பெரும்பாலும் அவர்கள் கூற மாட்டார்கள். அதையும் தெளிவுபடுத்தும் போது, சரியான கண்ணாடியும், காது கேட்கும் மிஷினும் கிடைக்கும் போது, இன்னும் நிம்மதியாக இருப்பார்கள்.

ஒரு மாதத்தில் எத்தனை தடவை கீழே விழுகிறார்கள் என்பதையும், அதற்கான காரணத்தையும் முழுமையாக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்றாற் போல், கையில் ஸ்டிக் உடன் நடக்கக் கூற வேண்டும். இதனால், எலும்பு முறிவு ரீதியான பிரச்னைகளைத் தடுக்க முடியும்.

சிலர், அவர்களை மீறி, வீட்டிலோ அல்லது படுக்கையிலோ யூரின் இருந்து விடுவார்கள். அதைப்பற்றி கூறுவதற்கு தயங்குவார்கள். அதையும் மருத்துவர், கேள்வியாக கேட்கும் போது, அதற்கான தீர்வாக பேம்பர்ஸ் பயன்படுத்த வலியுறுத்துவார்கள்.வயதானவர்களுக்கு தூக்கம் எப்பொழுதும் ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் தான் இருக்கும். அதற்கும் குறைவாக இருக்கும் போது, தூக்கத்திற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

மனச்சோர்வு இருக்கிறதா என்பதையும் கேட்க வேண்டும். மனச்சோர்வு இருந்தால், அதற்கேற்ற வகையில் மருந்துகளை கொடுக்கும் போது, இன்னும் நிம்மதியாக வாழ்வதற்கு அவர்களுக்கு உதவ முடியும். டிமென்ஷியா இருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கும் தேவையான விழிப்புணர்வை வழங்க வேண்டும்.மேலும் மருத்துவரைச் சந்திக்க வரும் முதியவரிடம் தனியாக வசிக்கிறாரா என்றும் கேட்க வேண்டும்? தனியாக இருக்கிறார் என்றால், அவர் மருந்து மாத்திரைகளை முறையாக எடுப்பதைப் பற்றியும், மாத்திரைகளால் சிலநேரங்களில் ஏற்படும் விளைவுகள் பற்றியும் அவருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்த கேள்விகள் அனைத்தையும், மருத்துவர் தாமாக முன் வந்து கேட்பதன் வழியாக, முதியோர்களின் சிகிச்சையில், மேலும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் இன்னும் நல்ல பலனை உணர முடியும். இவ்வாறாக மருத்துவர்கள், உலகளவில் முதியவர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டுமென்று சிகிச்சையை மட்டுமின்றி, அவர்களின் துணையும் நமக்கு முக்கியம் என்பதை நமக்கு புரிய வைத்திருக்கிறார்கள்.

இதனுடன், சமூகத்தில் எத்தனையோ விதமான குழுக்கள் ஆரம்பித்து, மக்கள் கூட்டம், கூட்டமாக அவர்களுக்கான பாதுகாப்பையும், மனம் விட்டுப் பேசக்கூடிய ஒரு தளத்தையும் உருவாக்கி வருகிறார்கள். அதே போல், வயதானவர்களுக்கு அந்தந்த ஏரியாவில், ஒரு குழு ஆரம்பிக்கும் போது, அவர்களும் மனம் விட்டு பேசுவதற்கும், அவர்களுக்கு இருக்கும் சிரமங்களை தெரிந்து கொள்வதற்கும் ஒரு இடமாக அமைத்துத் தர வேண்டும்.

வாழ்க்கையில் எதுவும் பாரமில்லை என்ற உணர்வு தான், மனிதனை கருணையுள்ளவனாக இருக்க வைக்கும். அதனால் முதியோர்களிடம் கருணையும், அன்பையும் வெளிப்படுத்த ஒரு தூணாக அந்தந்த ஏரியா மக்கள் ஒன்றுகூடி செயல்பட வேண்டும் என்பதே அவசியத் தேவையாகும்.இனி வரும் காலங்களில் இம்மாதிரியான குழுக்கள் நமக்கு நாமே செய்யக்கூடிய ஒரு இன்றியமையாத விஷயமாகவும் இருக்கும்.

The post நோய் நாடி appeared first on Dinakaran.

Related Stories: