மூளையின் முடிச்சுகள்

நன்றி குங்குமம் தோழி

நாமும் நமது ஆளுமையும்!

ஒரு காலேஜ் பேராசிரியரிடம் பேசும் போது ஆரம்பித்த விவாதம்தான், இந்தக் கட்டுரையை எழுதக் காரணமாகிவிட்டது. நம் தமிழ்நாட்டில் விதம்விதமான பட்டப் படிப்புகள் இருக்கிறது. உதாரணத்திற்கு, பி.காம் என்று எடுத்தால், அதில் குறைந்தது ஆறு பிரிவுகள் கலந்த பி.காம் டிகிரி அட்வான்ஸ்டாக இருக்கிறது. அந்தளவிற்கு மாணவர்கள் திறமையாக, புதுமையாக கல்வி கற்றாலும், ஏன் ஆளுமை சார்ந்த விஷயங்களில் திணறுகிறார்கள் என்பதுதான் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார்.

உண்மையில் ஆளுமை என்றால் என்ன?

பொதுவாக, ‘ஆளுமை’ (Personality) என்பதை நம் மக்கள் ஆள்பாதி, ஆடை பாதி என்றே கூறுகிறார்கள். அதில் பாதி உண்மை இருக்கிறது. ஆனால் அது மட்டுமே உண்மையா என்றால், உண்மையல்ல. பெரும்பாலும் நாம் அணியும் ஆடைகளை முன்னிட்டும், விதம் விதமாக அணியும் அணிகலன்கள் மற்றும் பயன்படுத்தும் பொருட்கள், அலங்காரங்கள், பயன்படுத்தும் வாகனங்கள் என ஒருவரின் வெளித்தோற்றம் மற்றும் அவர் வெளிப்படுத்தும் செயல்பாடுகளை வைத்து கூறுவது ஆளுமை அல்ல. ஆளுமை என்பதை உளவியலில் எளிமையாகக் கூற வேண்டுமென்றால், நமது எண்ணங்கள், நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள், நடத்தைகளின் தொகுப்பு இவை அனைத்தையும் சேர்த்துக் கூற வேண்டும்.

நமது உலகில் எத்தனையோ விதமான ஆளுமைமிக்க நபர்கள் ஆளுமையின் முக்கியத்துவம் மற்றும் சிறப்பினை புரிய வைத்திருக்கிறார்கள். மக்கள் புரிந்துகொள்ள தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். உதாரணமாக, நாம் வழிபடும் அல்லது நாம் இருக்கும் இடத்தில் அமைதியைத் தரும் என்று நாம் சிலையாக அல்லது புகைப்படங்களாக வைத்துக் கொண்டிருக்கும் நபர்களாக, புத்தர், இயேசு, காந்தி, நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா, ஆங் சான் சூகி மற்றும் அப்துல்கலாம் போன்ற மாமனிதர்களை உளவியலில் ஆளுமை மிக்க தலைமைகளாக நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றோம். காரணம், அவர்களின் ஆளுமைத்திறன் என்பதை, சாமானிய நபர்களையும் சமூகத்தையே மாற்றக்கூடிய வலிமை படைத்த மாமனிதர்களையும் வேறுபடுத்தி காண்பித்து, நேர்மறையாக வாழ்ந்து காண்பித்த நபர்களாக இன்றும் மக்களின் மனதில் பதிந்திருக்கிறார்கள்.

நேர்மறையான ஆளுமைத்திறன் என்பதுதான் நம் வாழ்வில் மிகவும் முக்கியமானது. இதை நாம் வளர்த்துக்கொள்ள முடியும். ஆனால், இன்றைய டிஜிட்டல்
உலகில், எதிர்மறை கருத்துக்களை தொடர்ந்து பேசுவதால் கிடைக்கும் வளர்ச்சியைக் கொண்டு, நேர்மறை ஆளுமையை பற்றி யோசிக்க மறந்த சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய ஆளுமையை வளர்த்தெடுப்பதில் தடையாக இருக்கும் விஷயம் எதுவென்றால், அனைத்தையும் சந்தேகத்தோடு பார்ப்பது, யார் என்ன நல்லது செய்தாலும், அதில் குறை காண்பது, மற்றவர்களை மட்டம் தட்டி கேலி செய்வது என்று நாம் பார்க்கும் காட்சி, ஊடகங்களின் தாக்கம், டிஜிட்டல் சமூக உரையாடல் அனைத்தும் நம்முடைய, நமக்குள் இருக்கும் நேர்மறையான ஆளுமையை கண்டுகொள்ள முடியாமல், தடுத்து நிறுத்தி விடுகிறது.

ரீல்ஸ் பார்க்கும் சமூகத்தில், முப்பது வினாடிகளுக்கு மேல், நம்முடைய உணர்வை தக்க வைக்க முடியாமல், மாறி மாறி பல உணர்வுகளுக்கும் போய்க் கொண்டிருக்கிறோம். அதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுவது, பதற்றப்படுவது, பயத்துடன் இருப்பது, நினைத்ததை உடனே செய்து விட வேண்டுமென்ற பிடிவாதம், தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் சக மனிதர்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்காமல் இருப்பது, தனக்கு மட்டுமே அனைத்துமே தெரியும் என்று, தன்னைப்பற்றிய உயர்ந்த மனப்போக்குடன் இருப்பது, மற்றவர்களின் கருத்துகளை உதாசீனப்படுத்துவது. தங்களுக்கு எதிராக ஏதும் ஒரு விஷயத்தை செய்து விட்டால் போதும், உடனே பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவது என பல வகையான எதிர்மறை உணர்வுகளுடன் தினம் தினம் நாம் முட்டி மோதிக் கொண்டிருக்கிறோம்.

இம்மாதிரியான எதிர்மறையான உணர்வினால், சக மனிதர்களுடன் பேசுவதிலும், பழகுவதிலும் சிரமம் ஏற்படும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அடிக்கடி வாக்குவாதம் மற்றும் சண்டை என்று உடனுக்குடன் பிரிவைப் பற்றி சிந்திப்பதாக இருக்கும். யாருடனும் சேர்ந்து வாழும் எண்ணம் குறைய ஆரம்பிக்கும்.உண்மையில், இவை எல்லாவற்றில் இருந்தும், நாம் நமக்கான நேர்மறையான ஆளுமையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். ஆளுமை என்பதை ஒரு நாளில் நாம் நமக்குள் வளர்த்துவிட முடியாது. அதுவொரு தொடர்ச்சியான செயல்பாடாக, பழக்க வழக்கமாக நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஆளுமையை சிறப்பாக செயல்படுத்த வேண்டுமென்றால், அதில் மிக முக்கியமானது, தன்னைப் பற்றிய சுய புரிதலும், சுய விழிப்புணர்வும் அவசியமானது. ஏனென்றால், நமக்குள் ஏற்படும் எண்ணங்களை தொடர்ந்து கவனித்துக் கொண்டு வரும் போது, அதில் ஏற்படும் மாற்றங்களையும், அதிலுள்ள நிறை, குறைகளையும் முழுமையாக ஏற்றுக் கொண்டு, அதை பகுத்தறிந்து செயல்படுவதே மிக அத்தியாவசியமானது.எனவே, நாம் நமது எண்ணங்களை கவனித்து, அதில் ஒரு சுயக் கட்டுப்பாடும், தகவல் தொடர்பு திறனையும், பிரச்சனைகளை கையாளும் திறனையும், முடிவெடுக்கும் திறனையும், அடிப்படை வாழ்வியல் திறனையும் நாம் தொடர்ந்து ஒரு பயிற்சியாக செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

இவற்றை செய்யும் போது, நாம் நமது உடலையும், மனதையும் சீராக வைத்துக்கொள்ள பழக ஆரம்பிப்போம். மனிதர்கள் என்றைக்கும் தங்களுடைய நல்ல குணங்களை மட்டுமே காண்பிக்க ஆசைப்படுவார்கள். திடீரென்று காட்சி ஊடகங்களின் தாக்கத்தினால்தான், நல்லவனாக இருந்து கஷ்டப்படுவதை விட, கெட்டவனாக இருந்து கொள்கிறேன் என்ற வரியை பிடித்துக்கொண்டு சுற்றுகிறார்கள்.

உண்மையில், நமது பண்பானது, நம்மை மட்டுமல்ல, நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் ஒரு சூழல் போல் மாற்றிவிடும். அந்த மாதிரியான மாற்றத்தை, நம்முடைய நேர்மறையான ஆளுமையில் இருந்து கொண்டு வர முயற்சி செய்வோம்.

காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்

 

The post மூளையின் முடிச்சுகள் appeared first on Dinakaran.

Related Stories: