பள்ளிக்கூடம் நிறைந்த பகுதியில் மதுபான ‘பார்’ அமைக்க எதிர்ப்பு

 

கோவை, நவ. 20: கோவை மாநகர் 43வது வார்டுக்கு உட்பட்ட வெங்கட்டாபுரம், வேலாண்டிபாளையம், தடாகம் ரோடு பகுதியில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. இப்பகுதியில் பாரத் மேல்நிலை பள்ளி, அவிலா கான்வென்ட், சிந்தி வித்யாலயா, காந்தியடிகள் மேல்நிலை பள்ளி மற்றும் 2 மாநகராட்சி பள்ளி என மொத்தம் 6 பள்ளிக்கூடங்கள் உள்ளன.

மேலும், 2 ரேஷன் கடைகள் உள்ளன. சுமார் ஆயிரம் பேர் பணிபுரியக்கூடிய தனியார் பம்ப்செட் நிறுவனம் உள்ளது. இப்படிப்பட்ட மக்கள் நெருக்கடியான பகுதியில் ஒரு தனியார் மதுபான ‘பார்’ அமைக்க இடம் தேர்வுசெய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது.  இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே பகுதியை சேர்ந்த அதிமுக 43வது வார்டு செயலாளர் தனபால் தலைமையில் அப்பகுதியினர் நேற்று முன்தினம் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், ‘‘ஏற்கனவே, இப்பகுதியில் 5 டாஸ்மாக் ‘பார்’ உள்ளது. தற்போது 6வதாக தனியார் ‘பார்’ அமைய உள்ளது. எனவே, இதை தடை செய்ய வேண்டும்’’ எனக்கூறியுள்ளனர். இந்த மனுவை பரிசீலனை செய்த மாவட்ட கலெக்டர், இதுபற்றி உரிய ஆய்வு நடத்தும்படி, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

The post பள்ளிக்கூடம் நிறைந்த பகுதியில் மதுபான ‘பார்’ அமைக்க எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: