கோவை, நவ. 15: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தவிர, தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 20ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகள், மேட்டுப்பாளையம், காரமடை, துடியலூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது.
மேலும், டவுன்ஹால், உக்கடம், பீளமேடு, வடகோவை, சாய்பாபாகோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்தது. இந்த மழையினால் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் மற்றும் பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் பாதிக்கப்பட்டனர். சாலைகளில் பல இடங்களில் மழைநீர் தேங்கி இருந்தது. மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மழையால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நகராட்சிகளில் முன்னெற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
குறிப்பாக, கடந்த காலங்களில் வடகிழக்கு பருவமழையின்போது அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும், மழைக்காலத்தில் சீரான மின்சாரம் வழங்கவும், மின் தொடர்பான விபத்துகளை தவிர்க்கவும் மின்வாரியத்திற்கு அறிவுத்தப்பட்டுள்ளது.
மழையால் பாதிப்பு ஏற்படும் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைக்க மாவட்டம் முழுவதும் 92 நிவாரண மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இந்த மழையினால் பொதுவாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்படும்.
இதனால், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளத்தின் அளவு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டம் முழுவதும் மழைநீர் வடிகால் சீரமைத்தல், பாதாள சாக்கடை சுத்தம் செய்தல், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அகற்ற ராட்சத மோட்டர்கள் பயன்படுத்துதல் போன்ற முன்னெற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், மழை பாதிப்பு ஏற்பட்டால், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் திருமண மண்டபங்கள், பள்ளிகள், சமுதாய கூடங்களில் 92 நிவாரண மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதில், மாநகராட்சி பகுதியில் மட்டும் 26 நிவாரண மையங்கள் உள்ளது. மீட்பு பணிகளுக்காக பயிற்சி அளிக்கப்பட்ட 1,870 தன்னார்வலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆகியோர் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், தீயணைப்பு துறையினரும் மீட்பு பணிக்காக தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்து வைத்துள்ளனர். தவிர, நிவாரண மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சமையல் கூடங்கள் தயார்நிலையில் இருக்கிறது. தேவையான அளவு உணவுகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. பெரிய மழை பெய்தால் அதனை சமாளிக்கும் வகையில் அனைத்து நிலையிலும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த காலங்களில் வடகிழக்கு பருவமழையின்போது அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
The post மாவட்டத்தில் பருவமழையையொட்டி தயார் நிலையில் 92 நிவாரண மையங்கள், 1,800 தன்னார்வலர்கள் appeared first on Dinakaran.