ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மண் தொட்டிகள் வழக்கொழிந்து பிளாஸ்டிக் மலர் தொட்டிகளாக மாறிவிட்டன. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்காவில், மே மாதம் நடத்தப்படும் மலர் கண்காட்சிக்காக 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர் அலங்காரம் மேற்கொள்ளப்படும். இதனை காண வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் 2வது சீசனின் போது 15 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்படும். ஆரம்ப காலத்தில் பூங்காவில் மண் தொட்டிகளில் அனைத்து மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் மலர் தொட்டிகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. தற்போது பூங்காவில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர் தொட்டிகள் பிளாஸ்டிக் மலர் தொட்டிகளாக மாறிவிட்டன.
தற்போது பூங்காவில் நாற்று நடவு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் நாற்று நடவு பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, பூங்காவில் உள்ள 35 ஆயிரம் தொட்டிகளில் உரம் கலந்த மண் கொட்டப்பட்டு தொட்டிகளை தயார் செய்யும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் பெரும்பாலான தொட்டிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மண் தொட்டிகளாக இருந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் தொட்டிகள் படிப்படியாக ஆக்கிரமித்து தற்போது அனைத்து தொட்டிகளும் பிளாஸ்டிக் தொட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பல ஆயிரம் தொட்டிகள் மட்டுமின்றி, கண்ணாடி மாளிகைகள் மற்றும் இதர பகுதிகளில் வைக்கப்படும் மலர் தொட்டிகளும் பிளாஸ்டிக் தொட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து பூங்கா அதிகாரிகள் கூறுகையில், கடந்த காலங்களில் மண் தொட்டிகள் அதிகம் இருந்தன. தொட்டிகள் இடம் மாற்றும் போதும் மட்டுமின்றி, பல்வேறு காரணங்களால் உடைந்து வந்தன. இதனால், பாதுகாப்பு கருதி அனைத்து தொட்டிகளும் பிளாஸ்டிக் தொட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன, என்றனர். நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தாவரவியல் பூங்காவில் மண் தொட்டிகள் மறைந்து பிளாஸ்டிக் மலர் தொட்டி அதிகம் ஆக்கிரமித்து உள்ளது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
The post மண் தொட்டிகள் வழக்கொழிந்தது ஊட்டி தாவரவியல் பூங்காவை ஆக்கிரமித்த பிளாஸ்டிக் மலர் தொட்டிகள்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை appeared first on Dinakaran.