நீலகிரி கேரள சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர்

 

ஊட்டி,நவ.18: விடுமுறை நாளான நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலாத்தளங்களில் கேரள மாநில சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. சுற்றுலா மாவட்டமான நீலகிரிக்கு வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை புரிய இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது பல்வேறு பணிகளுக்காக வருகை புரிவோரும் இ-பாஸ் எடுத்து நீலகிரிக்கு வருகின்றனர். இந்த சூழலில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பனிமூட்டத்துடன் சாரல் மழை நீடிப்பதால் குளிரான காலநிலை நிலவி வருகிறது.

தற்போது வார நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டாலும்,வார இறுதி நாட்களில் கணிசமான அளவு வருகை புரிகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுகிழமை விடுமுறை தினமான நேற்று ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா,ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கூட்டம் காணப்பட்டது.

அதற்கேற்றார் போல் மழையின்றி இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலா தளங்களை மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர். இதேபோல் ஊட்டி படகு இல்லத்திலும் கூட்டம் காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய அதிக ஆர்வம் காட்டினார்கள்.பைக்காரா படகு இல்லம்,சூட்டிங்மட்டம் உள்ளிட்ட களைகட்டியிருந்தன. நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கேரளாவின் வயநாடு,மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.

The post நீலகிரி கேரள சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: