உளுந்தை ஊராட்சியில் பயன்பாட்டிற்கு வந்த நூலகம்

 

திருவள்ளூர், நவ. 18: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகம் சார்பில் நூலகங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து, கடம்பத்தூர் ஒன்றியம், உளுந்தை ஊராட்சியில் ரூ.1.40 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் ஓராண்டாகியும் அது மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. நூலகத்தில் பணியாளர் யாரும் நியமிக்கப்படாததால் பராமரிப்பின்றி இருந்தது.

இந்நிலையில், உளுந்தை ஊராட்சியில் இருளர் இன மக்களுக்காக தமிழக அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வட மாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இந்த நூலகத்தில் தங்கியுள்ளனர். மேலும் அங்கேயே சமைத்தும், துணி துவைத்தும் இருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நூலகத்தில் பணியாளர் இல்லாததாலும், வடமாநிலத்தவர்கள் தங்கி இருப்பதாலும் நூலகத்திற்கு யாரும் வருவதில்லை. எனவே ரூ.1.40 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உளுந்தை ஊராட்சி கிராம மக்கள் கோரிக்கை விடுத்ததாக தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியால் கலெக்டர் த.பிரபுசங்கர், ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார் ஆகியோர் உத்தரவின் பேரில் செய்தி வெளியான அன்றே கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) செல்வகுமார் உடனடியாக உளுந்தை ஊராட்சிக்கு சென்று அங்கே தங்கியிருந்த வட மாநிலத்தவர்களை வெளியேற்றிவிட்டு நூலகத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் (42) என்பவர் நூலகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தினகரன் நாளிதழுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post உளுந்தை ஊராட்சியில் பயன்பாட்டிற்கு வந்த நூலகம் appeared first on Dinakaran.

Related Stories: