சென்னை, நவ.17: மாற்றுத்திறனாளி சான்று வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை, வரும் 23ம் தேதி வரை நீட்டித்து சென்னை கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மூலம் 2023 செப்டம்பர் முதல் 2024 மார்ச் வரை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சமூக தரவு கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சான்று பெறாத 1,731 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மாற்றுத்திறனாளி சான்று வழங்கிட சிறப்பு மருத்துவ முகாம்கள் அரசு மருத்துவமனையில் கடந்த 29ம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி வட சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கான ஒதுக்கப்பட்டுள்ள மண்டலம் 1 முதல் மண்டலம் 8 வரையுள்ள பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனை, எழும்பூர் குழந்தை நல மருத்துவமனை, எழும்பூர் கண் மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று வந்தது. இந்த சிறப்பு மருத்துவ முகாம் மழையின் காரணமாக வருகிற 23ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மாற்றுத்திறனாளி சான்று வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் 23ம் தேதி வரை நீட்டிப்பு: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.