கோவை: கோவை ஆவாரம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே கிருஷ்ணராயபுரத்தில் கோவை மாநகர் மாவட்ட மதிமுக 28வது வார்டு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தின் உரிமையாளர் அதே பகுதியை சேர்ந்த நாராயணசாமி. இவர், இந்த இடத்தை மதிமுகவுக்கு கொடுத்துள்ளார். வாரிசு எதுவும் இல்லாத இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பிறகு, இங்கு மதிமுக அலுவலகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் இந்த இடம் எனக்குத்தான் சொந்தம் என உரிமை கொண்டாடி உள்ளார்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் சில ஆட்களை அழைத்து வந்து, பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கட்டிடத்தை இடித்து சூறையாடி உள்ளார். நேற்று காலை வழக்கம்போல் கட்சி அலுவலகத்துக்கு சென்ற மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு பீளமேடு போலீசார் வந்து அத்துமீறி கட்டிடத்தை இடித்த சுந்தர்ராஜ்(54) என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.
The post கோவை மதிமுக ஆபீஸ் இடித்து சூறை appeared first on Dinakaran.