நெல்லையில் இருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில் வழங்கிய சாம்பாரில் கிடந்த வண்டுகள்: சீரகம் என சமாளித்த ரயில்வே ஊழியர்

சென்னை: நெல்லையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து நெல்லைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நெல்லை சந்திப்பில் இருந்து காலை 6 மணியளவில் புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னையை வந்தடைகிறது. இந்த ரயிலில் பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இதற்காக பயணச்சீட்டில் கூடுதலாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து நேற்று காலை சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில், பாளை. கேடிசி நகரைச் சேர்ந்த சுடலைகண்ணு (46), அவரது நண்பர் நாங்குநேரி அடுத்த மறுகால்குறிச்சியைச் சேர்ந்த முருகன் (39) ஆகியோர் திருச்சிக்கு பயணம் செய்தனர்.

காலை 8 மணியளவில் பயணிகளுக்கு, ரயில்வே கேன்டீன் ஊழியர்கள் காலை உணவு விநியோகம் செய்தனர். அதில் 2 இட்லி, கேசரி, சாம்பார் ஆகியவை வழங்கப்பட்டது. இட்லியில் சாம்பாரை ஊற்றியபோது கருப்பாக வண்டுகள் கிடந்ததை பார்த்து முருகன் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர், நண்பர் சுடலைகண்ணு மற்றும் சக பயணிகளை சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார். அவர்களும் சாப்பிடவில்லை.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பயணி அங்கிருந்த ரயில்வே ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், ரயில்வே ஊழியர் இது வண்டு இல்லை, சாம்பாரில் உள்ள சீரகம் என்று கூறியுள்ளார். இதனால் பயணிகள் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சீரகத்தில் எப்படி தலை, கால்கள், வால் அனைத்தும் இருக்கும் என அதிகாரிகளிடம் பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையடுத்து, பயணிகள் அது வண்டு என்பதை உறுதி செய்ததை அடுத்து ரயில்வே ஊழியர்கள் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டனர். இது போன்று ஏற்கனவே பல புகார்கள் வந்துள்ளது. குறிப்பாக, சமீபத்தில் கூட நடிகர் பார்த்திபன் வந்தே பாரத் ரயிலில் வழங்கப்படும் உணவு குறித்து விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. எனவே அஜாக்கிரதையாக செயல்பட்ட ரயில்வே கேன்டீன் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.

The post நெல்லையில் இருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில் வழங்கிய சாம்பாரில் கிடந்த வண்டுகள்: சீரகம் என சமாளித்த ரயில்வே ஊழியர் appeared first on Dinakaran.

Related Stories: