சிவனிடம் வரம் பெற்ற நந்திதேவர்

சிவபெருமானுக்கு தொண்டு செய்வதே தன் வாழ்வின் லட்சியம், என சிவபக்தனான வீதஹவ்யர் கைலாயத்தில் கைங்கரிய பணியை செய்து வந்தார்.

எமன் கைலாசம்

வருதல்தவமுனிவர்கள், ரிஷிகள், சிவன் அடியார்கள், யோகிகள் ஆகிய அனைவரும் சிவநாமம் ஓதினர். “ஓம் சிவாய நமஹ… ஓம் சிவாய நமஹ…’’ என பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்துக் கொண்டு இருந்தனர். அச்சமயம் சிவபெருமானைக் காண கைலாயம் வந்தார் எமதர்மன். பூதகணங்கள் எமனை வரவேற்று உபசரித்தனர். சிவபெருமானும் எமனும் சற்று நேரம் உரையாடினர். கைலாயத்தில் ஒரு புறம் தூய்மை பணியைச் செய்துகொண்டிருந்த வீதஹவ்யரை சிவபெருமான் நோக்கினார்.

“வீதஹவ்யா.. இங்கே வா” என அழைத்தார். அவரும் சிவபெருமானின் அழைப்பை ஏற்று அருகே வந்தார். “நீ எமனோடு சென்று எமலோகத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரவேண்டும். அங்கு இருக்கின்ற சூழல் எப்படி உள்ளன என்பதை நீ அறிந்து வா” என்று கட்டளையிட்டு எமனோடு அனுப்பி வைத்தார். எமனும், சிவனிடம் சற்று நேரம் பேசிவிட்டு விடை பெற்று வீதஹவ்யரை அழைத்துக் கொண்டு எமலோகம் புறப்பட்டனர். எமலோகத்தில், பாவம் செய்தவர்கள் தண்டனையை அனுபவித்துக் கொண்டு இருந்தனர். நரகத்திற்கு வந்து, மக்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் இறங்கினார் வீதஹவ்யர்.

“எமதர்மா இது என்ன இத்தனை
கொடுமை’’ என்று கேட்டார்.

“பாவத்தின் சம்பளம் இது. யார் யாருக்கெல்லாம் புண்படுத்தினாரோ, அத்தகைய பாவங்களை தீர்க்கும் இடமே இந்த நரகம்” என்று கூறியதும், அப்படியா என கண் கலங்கினார் வீதஹவ்யர்.
தானக் கற்குவியல் எமலோகத்தை இருவரும் சுற்றி பார்த்துக் கொண்டு வருகின்றனர். இப்பொழுது ஓர் இடத்தில் கற்குவியல் குவிந்து இருப்பதைக் காண்கின்றார் வீதஹவ்யர்.
“இது என்ன?’’ என்று வினவினார் வீதஹவ்யர். பூலோகத்தில் மனிதர்கள் அவசர அவசரமாக செய்யும் பிழைகள் இப்படி ஒரு கற்குவியல் என்றார் எமன்.
“அப்படியா, அது என்ன பிழை?” என்று விழித்தார், வீதஹவ்யர்.

“முற்பிறவியில் நீங்கள் செய்து சிவத்தொண்டு என்று வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று எமன் புன்னகைத்தார்.
“சிவதொண்டுக்கும், கற்குவிற்கும் என்ன சம்பந்தம்?” எனக் கேட்டதும், எமன் புன்னகைப் புரிந்து, “நீங்கள் அன்னதானம் செய்யும் பொழுது, அவசர அவசரமாக கற்களை கவனிக்காமல் அலட்சியமாக சமைத்துப் போட்டதன் பலன். சாப்பிட்டவர்கள் வாயில் சிக்கிய கற்குவியலே இது” என்றார். இதை கேட்டதும் பிரம்மித்துப் போனவர்;

“அடடா.. இவ்வளவு பெரிய பாவத்தை நான் செய்திருக்கிறேனா? இந்த கற்குவியல் பாவத்தை நானே சாப்பிட்டு கழிக்கிறேன்” எனக் கூறிவிட்டு,
“என்னுடைய மூதாதையர்களும் இதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள் அல்லவா?” என்று எமனை பிரார்த்தி கேட்டார். அவர்களும் நரகத்தில் அவதியுற்றுக் கொண்டிருக்கிறார்கள் என எமன் கூறியதும், சங்கடப்பட்ட வீதஹவ்யர், உடனே புறப்பட்டு சிவபெருமானை காணப் புறப்பட்டார்.

வீதஹவ்யர் சிவபெருமானை காண கைலாயம் சென்றார்.“சுவாமி நான் பூலோகத்தில் மானிடராகப் பிறந்து, என் கர்மாவை தீர்க்க வேண்டும். என் முன்னோர்கள் நற்கதியை அடைய வேண்டும். அதற்கு தாங்கள் அருள் புரிய வேண்டும்” என்று கேட்டார். சிவபெருமான்;“நீ எந்த பயணத்திற்காக மேற்கொள்கின்றாயோ, அதில் வெற்றி பெறுவாய்’’ எனக் கூறி “ததாஸ்து” என்று வாழ்த்தி அனுப்பினார். “ததாஸ்து” என்றால் நீ எண்ணியது அப்படியே நடக்கும் என்று பொருள். ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டு, வீதஹவ்யர் பூலோகத்தில் மனித பிறவி எடுத்தார்.

சிலாதர் ஜனனம்

திருவையாறில், அந்தண தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். கல்லையே சாப்பிட்டு வாழ்ந்ததால் இவருக்கு சிலாதர் (சிலா என்றால் கல் என்று பொருள்) என்ற காரணப் பெயரை வைத்தனர். எமலோகத்தில் இருந்த கற்குவியல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. சிலாதர், இளமையிலேயே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். அனைவரும் சிலாதரின் தேஜஸ்சை கண்டு மயங்கினர். திருமண வயது அடைந்ததும், பெற்றோர் சித்ராவதி என்கின்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். சித்ராவதி கணவனுக்கு ஏற்ற குணவதியாக அமைந்ததால் இருவரும்
இல்லற, துறவரத்தில் ஈடுபட்டு சிவ தொண்டுகள் செய்து சிவபெருமானை எண்ணியே அவர்கள் வாழ்ந்து வந்தனர். இவ்வாறு அவர்கள் இருவரும் தவம் செய்ய காட்டுக்குச் சென்று ஒரு குடியல் அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்த பொழுது, சப்த ரிஷிகள் “பிட்சாம் தேஹி” என்று அழைத்து பசிக்கு உணவு கேட்டு வந்து நின்றனர்.

பிள்ளை வரம் வேண்டி

சிலாதர் மனைவி உணவைக் கொண்டு வர செல்லும் பொழுது, “தாயே! பிள்ளை இல்லா இந்த குடியலில் நாங்கள் உணவு உண்ண மாட்டோம்” என்றுகூறி உணவு உண்ணாமல் திரும்பிச் சென்றனர். சிலாதர் மனைவி வருத்தம் அடைந்தாள். “சுவாமி நமக்கு பிள்ளை இல்லை என்பதினால் என் கையால் முனிவர்கள் யாரும் உண்ணவில்லையே. அத்தகைய கொடிய பாவத்தை நாம் செய்திருக்கிறோம்” என்று கண்ணீர் மல்க கேட்டாள். சிலாதர் கண்ணீர் சிந்திய மனைவியை பார்த்து, “சித்ராவதி; நீ கண்ணீர் சிந்தாதே. மன வருத்தமும் படாதே”. என்று ஆறுதல் மொழி கூறினார்.

“சுவாமி நமக்கு குழந்தை பிறக்குமா?”
“மனித கருவில் பிறக்கும் குழந்தை நமக்கு வேண்டாம். சிவனின் அருளால் மரணம் இல்லாத வாழ்வு வாழக்கூடிய ஒரு மகனை நாம் பெற்று எடுப்போம்”. என்று கூறி இருவரும் தவத்தில் ஆழ்ந்தனர். சிவபெருமான், இவர்கள் தவத்தைக் கண்டு மெச்சி, காட்சி தந்தார். “உங்களுக்கு என்ன வரம் வேண்டும்” என்று கேட்டார்.

“கருவில் இருந்து பிறக்காத அற்புதமான மரணம் இல்லாத மகனை நீ தந்து அருள வேண்டும்” என்று கேட்டார். சிவபெருமான் சற்று சிந்தித்து,
“உனக்கு ஒரு நல்ல மகனை வேண்டுமானால் தருகிறேன். ஆனால், அக்குழந்தை நிச்சயமாக உனக்கு நல்லதை தரும் நீ யாகத்தை செய்” என்று கூறினார்.

சர்பேஸ்வரர்

இருவரும் “புத்திரகாமேஷ்டி யாகம்’’ செய்ய அப்பொழுது நிலத்தை தூய்மைப் படுத்தினர். நிலத்தைத் தோண்டும் போது, அழகான நவரத்தின பெட்டி கிடைத்தது.
“பெட்டியை திறந்து பார்’’ என்ற அசரீரி கூறியது. சிலாதர் திறந்தார். அதில் ஓர் அழகான ஆண் குழந்தை இருப்பதை கண்டு, அக்குழந்தையை எடுத்து, “சர்பேஸ்வரர்” எனப் பெயரைச் சூட்டினர். மிகவும் சந்தோஷமாக அக்குழந்தையை வளர்த்தனர். சர்பேஸ்வரர், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். இவருக்கு, எட்டு வயது இருக்கின்ற பொழுது சிலாதரை தேடி மித்ரர், வருணன் ஆகிய இரு தேவர்கள் குடியலுக்கு வந்தனர். வந்த தேவர்களிடம் தன் மகனை பார்த்து, வாழ்த்துங்கள் என்று கேட்டார் சிலாதர்.
அவர்கள் ஒரு கணம் திகைத்து நின்றனர்.

குறைந்த ஆயுள்

“அல்ப ஆயுள் (குறைந்த ஆயுள்) உள்ள குழந்தையை நாங்கள் எப்படி வாழ்த்துவது. அவன் எட்டு வயதில் மரணித்து விடுவான்” என்று கூறி வாழ்த்தாமல் திரும்பிச் சென்றனர். தேவர்கள் செயலால் சிலாதரும் அவருடைய மனைவியும் அதிர்ச்சி அடைந்தனர். “எம்முடைய குழந்தை இறந்துவிடுவானா?’’ என கண்ணீர் சிந்தினாள்,
சித்ராவதி. அப்பொழுது, அங்கே வந்தார் சர்பேஸ்வரன்.

“அப்பா நீங்கள் கவலை அடைய வேண்டாம். நான் மரணம் இல்லாத வாழ்வு பெற்ற மகனாகத்தான் இருப்பேன். நீங்கள் என்னை நினைத்து வருத்தப்பட வேண்டாம்’’ என சொல்லி, திருவையாற்றில் இருக்கின்ற சூரிய குலத்தில் மூழ்கி பஞ்சாட்சர மந்திரமான “ஓம் சிவாய நமஹ… சிவாய நமஹ..’’

என்கின்ற மந்திரத்தை ஓதினார். பின்பு ஹரி அயன் தீர்த்தத்தில் மூழ்கி பஞ்சாட்சர மந்திரத்தை கோடி முறை கூறும் பொழுது நீர் வாழ் ஜந்து (நீர் வாழ் உயிரினம்) ஒன்று அவர் ரத்தத்தை உறிஞ்சது. அப்பொழுதும் அதை கவனிக்காமல் சிவ மந்திரம் சொல்வதிலே குறியாக இருந்தார், சர்பேஸ்வரன். சூரிய புஷ்கரணி ஆழத்தில் நின்று ஒரு கோடி வீதம் பஞ்சாட்சர மந்திரத்தை விடாது ஜெபித்தார்.

நந்திதேவர்

அக்கணம் சிவனும் – பார்வதி தேவியும் தோன்றினர். சிவ ஆகமங்கள் பொருள் உபதேசித்தார். பின்பு இன்று முதல் உன்னை நந்தி தேவர் என்று அனைவராலும் அழைக்கப்படுவாய் என ஆசி வழங்கினார். தேவர்கள் அனைவரும் “நந்திதேவர் வாழ்க.. வாழ்க..’’ என கோஷமிட்டு வாழ்த்தினர். சிவபெருமான், நந்தியை பார்த்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அக மகிழ்ந்த நந்திதேவர்,

“சிவபெருமானே! யாருக்கும் கிடைக்காத பேறு நான் பெற வேண்டும். ரிஷப உருவத்தை தாங்கி உம் அருகிலேயே இருக்கக்கூடிய ஒரு வாய்ப்பு தரவேண்டும். எப்பொழுதும் நான் உங்களைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அத்தகைய வரத்தை தாங்கள் அருள வேண்டும் என வேண்டினார். சிவபெருமான் புன்னகை புரிந்து,
“நேரம் வரும்போது அத்தகைய பதவியை தருகிறேன்’’ எனக் கூறி மறைந்தார்.

நந்திதேவருக்கு திருமணம்

சிவ சிந்தனையில் இருந்த நந்திக்கு, இல்லற வாழ்வின் அருமை பெருமையை அறிய செய்ய விரும்பினார் சிவபெருமான். ஆகையால், தம்பதி சகிதமாக பூமிக்கு வந்தார். திருமழபாடியில், தவ நெறிமுறைப்படி வாழ்ந்த வசிஷ்டரின் பேயர்த்தி சுயபிரபை. நற்குணவதி. அவளை நந்தி தேவருக்கு மணம் பேசினார். வைத்தியநாத திருக்கோயிலில் நந்தி தேவருக்கும், சுயபிரபைக்கும்
சிவபெருமானே முன்நின்று திருமணம் நடத்தி வைத்தார். தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள், யோகிகள் ஆகியோர் வாழ்த்து உரைத்தனர்.
``நந்தி இணையடி நான் தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றி செய்து
அந்தி மதிபுணை அரனடி நாடொறும்
சிந்தை செய் தாகமம் செப்பலுற்றேனே’’

– என நந்தியின் பெருமையை திருமூலரே பாடுகிறார்.

ஐவகை நந்தி

1. கைலாய நந்தி.
2. மால் விடை நந்தி.
3. அதிகார நந்தி.
4. சாதாரண நந்தி.
5. பெரிய நந்தி.
– என்பன ஆகும்.

ஸ்ரீசைலத்தில் ஒன்பது வகையான நந்திகளை தரிசிக்கலாம்.

1. பத்ம நந்தி.
2. நாக நந்தி.
3. விநாயக நந்தி.
4. மகாநந்தி.
5. சோமநந்தி.
6. சூரியநந்தி.
7. கருட நந்தி.
8. விஷ்ணு நந்தி.
9. சிவநந்தி.

காப்பரிசி

பாற்கடலை தேவ – அசுரர்கள் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் தோன்றியது. சிவபெருமான் விஷத்தை நந்திதேவரை கொண்டு வரும்படி சொன்னார். தகித்திருந்த அந்த குடத்தை கொண்டு வந்து, சிவனிடம் கொடுத்தார் நந்தி. அந்த விஷத்தை சிவ பெருமான் குடித்தார். அதனை கண்ட பார்வதி தேவி கண்டத்தைப் (கழுத்தை) பிடித்து தடுத்து நிறுத்தினார். தூரத்திலிருந்து கவனித்து கொண்டு இருந்த நந்தி, கேலியாக சிரித்தார். சிவன், “எதற்காக சிரிக்கிறாய் நந்தி?’’ என்று கேட்டார். “இல்லை இந்த ஆலகால விஷத்திற்காக நம் தாயார் அச்சப்படுவது சிரிப்பு வருகிறது’’ என்றார்.

“ஓ! அப்படியா? சரி நந்தி, நீ இதை வந்து முகர்ந்து பார்” என அழைத்தார் சிவபெருமான். நந்தி, விஷத்தை முகர்ந்து பார்த்து அப்படியே மயங்கி விழுந்துவிட்டார். அப்பொழுது பார்வதி தேவியை அழைத்து, “தேவி, நந்தி மயங்கிவிட்டார். அதனால், அரிசியை தூளாக பொடித்து வெல்லத்துடன் கலந்துகொண்டு வா’’ என்று கூறினார். அவ்வாறே பார்வதி தேவியும் அதை கொண்டு வந்து சிவபெருமானிடம் கொடுக்க, அவர் அதை நந்தியை சுவாசிக்கச் செய்தார். மயக்கம் தெளிந்து எழுந்த நந்தி, சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டார். ஆலகால விஷத்தின் வீரியத்தை உணர்ந்தார். இந்த நிகழ்ச்சியின் காரணமாகத்தான், பிரதோஷ காலத்தில் காப்பரிசி பிரசாதமாக கொடுப்பதும் வழக்கமாயிற்று.

பொன்முகரியன்

 

The post சிவனிடம் வரம் பெற்ற நந்திதேவர் appeared first on Dinakaran.

Related Stories: