இந்த ஏரியின் முக்கிய நீராதாரமாக தொட்டபெட்டா சரிவில் உள்ள கோடப்பமந்து பகுதியில் உருவாகி நகரின் வழியாக வரும் கோடப்பமந்து கால்வாய் மூலம் வரும் தண்ணீரே பிரதானமாகும். காலபோக்கில் இந்த கால்வாய் மூலம் கழிவுநீர் கலக்க துவங்கியது. இதனால் ஏரி தண்ணீர் படகு சவாரிக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. 1970களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் இந்த ஏரியில் படகு இல்லம் அமைக்கப்பட்டது. தற்போது ஊட்டியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமாக படகு இல்லம் விளங்கி வருகிறது. இந்த ஏரியின் மறு கரையில் தேனிலவு படகு இல்லம் அமைக்கப்பட்டது. இதன் அருகில் இருந்து ஏரிக்கரையை ஒட்டி அலங்கார நடைபாதை அமைக்கப்பட்டது. இந்த ஏரிக்கரை நடைபாதையை பயன்படுத்தி சுற்றுலா பயணிகள் பொழுது போக்கி வந்தனர். காலபோக்கில் முறையாக பராமரிக்கப்படாத நிலை ஏற்பட்டது.
மேலும் வனத்தை ஒட்டிய மான் பூங்கா சாலை வழியாக காட்டுமாடு உள்ளிட்டவைகள் அங்கு உலா வர துவங்கின. இதனால் ஏரிக்கரை நடைபாதை பொலிவிழந்தது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் இந்த பாதையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சுற்றுலாத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் தமிழ்நாடு அரசு சுற்றுலா தலங்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக ஊட்டி படகு இல்லத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தேனிலவு படகு இல்ல பகுதியில் ஏரிக்கரையை ஒட்டி அமைந்துள்ள நடைபாதையை சீரமைத்து பல்வேறு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஊட்டி தேனிலவு படகு இல்ல பகுதி முகப்பில் இருந்து ஏரியின் கரையோரப்பகுதிகள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளன. ஏற்கனவே உள்ள நடைபாதை 700 மீட்டர் தூரத்திற்கு அகலப்படுத்தி சீரமைக்கப்பட உள்ளது. இதுதவிர பழைய மான்பூங்கா வரை சுமார் 700 மீட்டர் தூரத்திற்கு புதிதாக அலங்கார தடுப்புகள் மற்றும் அலங்கார விளக்குகளுடன் புதிதாக நடைபாதை அமைக்கப்பட உள்ளது.
5 அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய “காசிபோ” எனப்படும் நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளது. இதுதவிர நடைபாதையில் பொழுதுபோக்கிற்காக வரும் சுற்றுலா பயணிகள் அமர்ந்து உணவருந்த வசதியாக 15 கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்ட டேபிள் மற்றும் சேர் அமைக்கப்பட உள்ளது. மான் பூங்கா சாலையில் இருந்து வனவிலங்குகள் மற்றும் கால்நடைகள் உள்ளே நுழையாமல் இருக்க 200 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவர் கட்டப்பட உள்ளது. இதுதவிர வேறு சில மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகளை மேற்கொள்வதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. ஏரிக்கரை நடைபாதையை மேம்படுத்தப்படும் பட்சத்தில் ஊட்டி ஏரிக்கரையில் நடந்து கொண்டே இயற்கை காட்சிகளை ரசிக்கலாம். இது சுற்றுலா பயணிகளுக்கு புது அனுபவமாக இருக்கும்” என்றனர்.
The post ஊட்டி தேனிலவு படகு இல்லம் அருகே ரூ.5 கோடியில் 1.400 கிமீ தூரத்திற்கு அலங்கார தடுப்புகளுடன் நடைபாதை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு appeared first on Dinakaran.