மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பதிலடி; பாகிஸ்தான் நாட்டில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பெஷாவர்: பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டா ரயில் நிலையத்தில் கடந்த 9ம் தேதி மனித வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில், பாதுகாப்பு படையை சேர்ந்த 14 பேர் உள்பட 27 பேர் பலியாகினர். இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த நாட்டு ராணுவம் தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதற்காக சிறப்பு அதிரடி சோதனை நடத்தியது.

இந்தநிலையில் ராணுவத்தினர் நடத்திய என்கவுன்டரில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், ‘உளவுத்துறை தகவலின் அடிப்படையில் கைபர் பக்துன்க்வா, பலுசிஸ்தான் ஆகிய 2 மாகாணங்களில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை நடைபெற்றது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மிரான்ஷா மாவட்டத்தில் முதல் சோதனை கடந்த 12, 13ம் தேதிகளில் நடைபெற்றது.

அதில், வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். பின்னர், அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2வது கட்ட தேடுதல் வேட்டை பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பால்காதார் பகுதியில் நடைபெற்றது. அப்போது, ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்,’என்று கூறப்பட்டுள்ளது.

The post மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பதிலடி; பாகிஸ்தான் நாட்டில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: