இளநிலை பட்டப் படிப்புகளை மெதுவாக- விரைவாக படிக்க அனுமதி: யுஜிசி தலைவர் அறிவிப்பு

சென்னை: பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் இளநிலை பட்டப்படிப்புகளை விரைவாகவும், மெதுவாகவும் படித்து முடிக்க வாய்ப்பு வழங்கலாம் என்று யுஜிசி வல்லுநர் குழு அளித்த பரிந்துரைக்கு யுஜிசி அனுமதி அளித்துள்ளது என்று அதன் தலைவர் ஜெகதீஷ்குமார் தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ தன்னாட்சி கல்லூரிகளில் செயல்படுத்துவது தொடர்பான மாநாடு சென்னை ஐஐடியில் இன்று காலை தொடங்கியது. இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்த யுஜிசியின் தலைவர் ஜெகதீஷ்குமார் இன்று காலை மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பல்கலைக் கழக மானியக் குழு(யுஜிசி), உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான பல்வேறு வகையான பணியிடைப் பயிற்சி மற்றும் தொழில் பயிற்சிகள் உள்ளிட்டவற்றுக்கான வழிகாட்டு நெறிகளை வெளியிட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள் வெவ்வேறு வகையான அமைப்புகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். அதன் மூலம் மாணவர்களின் படிப்புகளுடன் கூடிய பயிற்சியும் கிடைக்கும். பல்கலைக் கழக மானியக் குழுவின் சார்பில் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி நியமிக்கப்பட்டார். அவரின் தலைமையில் அமைந்து குழு சில பரிந்துரைகளை எங்களுக்கு வழங்கியுள்ளது. அவற்றில், விரைவாக படிக்கும் மாணவர்கள் குறைவான காலத்துக்குள் இளநிலை படிப்புகளை படித்து முடிக்க விரும்பினால் அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது.

அதாவது 4 ஆண்டு படிப்பை 3 ஆண்டில் படித்து முடிக்க வாய்ப்பு வழங்குவது. மெதுவாக படிக்கும் மாணவர்கள் விரும்பினால் 3 ஆண்டுக்கான இளநிலை படிப்புகளை 4 ஆண்டு காலம் எடுத்து படிக்க வாய்ப்பு அளிப்பது, இது தவிர இளநிலை பட்டம் படித்து வரும் வேளையில் குறிப்பிட்ட காலத்துக்கும் பொருளாதார பிரச்னை, குடும்ப சூழல் காரணமாக இடையில் படிப்பை நிறுத்தி விட்டால் அவர்களும் 1 அல்லது 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகும் அந்த படிப்பை தொடர வாய்ப்பு அளிப்பது என்ற 3 பரிந்துரைகளை பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி அளித்துள்ளது.

மேலும், பல்கலைக் கழகங்கள் விரும்பினால் நேரடி செமஸ்டர்( Regular semester) படிப்புகளுடன் இறுதி செமஸ்டர்(End semester)படிப்புகளையும் நடத்த யுஜிசி அனுமதி அளித்துள்ளது. இதனால், தேசிய தேர்வு முகைமை நடத்தும் இறுதி செமஸ்டர் தேர்வுகளை படிக்காமல் காலம் மற்றும் பணத்தை சேமிக்க முடியும். மேலும் கல்வி நிறுவனங்கள் அனேக மாணவர்களை ‘ஸ்வயம்’ படிப்புகளை படிக்க ஊக்குவிக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் பெறும் 40 சதவீத மதிப்பீடுகள் கல்வி நிறுவனங்களில் சேரும் போதும் ஏற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு பல்கலைக் கழக மானியக் குழுவின் தலைவர் ஜெகதீஷ்குமார் தெரிவித்தார்.

The post இளநிலை பட்டப் படிப்புகளை மெதுவாக- விரைவாக படிக்க அனுமதி: யுஜிசி தலைவர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: