மண்டல கால பூஜை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு: பம்பையில் சிறிய வாகனங்களை நிறுத்த அனுமதி

திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. 16ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்குகின்றன. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டலகாலம் வரும் 16ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. தந்திரிகள் கண்டரர் ராஜீவரர், பிரம்மதத்தன் ஆகியோர் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறப்பார். இதன்பின்னர் நெய் தேங்காய்களை எரிக்கும் ஆழியில் தீ மூட்டப்படும். தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறும். சபரிமலை கோயில் மேல்சாந்தியாக கொல்லத்தைச் சேர்ந்த அருண்குமார் நம்பூதிரியும், மாளிகைப்புரம் மேல்சாந்தியாக கோழிக்கோட்டை சேர்ந்த வாசுதேவன் நம்பூதிரியும் பொறுப்பேற்பார்கள். நாளை இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.

கார்த்திகை 1ம் தேதியான நாளை மறுநாள் (16ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். புதிய மேல்சாந்திகளான அருண்குமார் நம்பூதிரி சபரிமலை கோயில் நடையையும், வாசுதேவன் நம்பூதிரி மாளிகைப்புரம் கோயில் நடையையும் திறப்பார்கள். அடுத்த ஒரு வருடத்திற்கு இவர்களது தலைமையில் தான் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களின் முக்கிய பூஜைகள் நடைபெறும். கடந்த 2018ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அந்த வருடம் முதல் பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மண்டல காலத்திலும் பம்பை ஹில்டாப் மற்றும் சக்குபாலம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்த கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

* நவ.23 வரை முன்பதிவு முடிந்தது
சபரி மலைக்கு பக்தர்கள் கூட்டத்தை தவிர்க்க ஆன்லைன் முறையில் தினசரி 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் முறையில் தினசரி 10 ஆயிரம் பேர் வரையிலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளனர். இதற்காக https;//sabarimalaonline.org என்ற இணையதளத்திற்குள் சென்று தேதி மற்றும் நேரம் வாரியாக முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு துவங்கிய 15ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் தற்போது முன்பதிவு முடிந்துள்ளது. இதேபோல், நவ. 25, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் முன்பதிவு முடிந்து விட்டது. அதே நேரம் ஸ்பாட் புக்கிங் முறையில் உடனுக்குடன் பதிவு செய்து சபரிமலை சன்னிதானம் செல்லலாம்.

* செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகம்
சபரிமலை பக்தர்கள் வசதிக்காக பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் சார்பில் ‘சுவாமி சாட் போட்’ என்ற செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான லோகோவை நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார். இதில் சபரிமலை கோயில் நடைதிறப்பு, பூஜை நேரங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவை குறித்த விவரங்களை தமிழ், மலையாளம், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய 6 மொழிகளில் தெரிந்து கொள்ளலாம். ஸ்மார்ட் போன் இன்டர்பேஸ் மூலம் இதை பயன்படுத்த முடியும்.

* 18 மணி நேரம் திறந்திருக்கும்
சபரிமலையில் இந்த மண்டல காலத்தின் முதல் நாளில் இருந்தே 18 மணி நேரம் கோயில் நடை திறந்திருக்கும். தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும்.

The post மண்டல கால பூஜை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு: பம்பையில் சிறிய வாகனங்களை நிறுத்த அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: