தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; கடந்த 13 நாட்களில் சவரனுக்கு ₹3280 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிரடியாக குறைந்து வருவதால் நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 13 நாட்களில் சவரனுக்கு ₹3280 குறைந்துள்ளதால் பலரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 16ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ₹55 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. பின்னர் படிப்படியாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி, கடந்த அக்டோபர் மாதம் இறுதி வரை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ₹60 ஆயிரத்தை தொட்டுவிடும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அதற்கேற்றாற்போல், கடந்த மாதம் 31ம்தேதி ஒரு சவரன் ₹59,640 வரை சென்றது.

நேற்று முன்தின நிலவரப்படி, கிராமுக்கு ₹135-ம், சவரனுக்கு ₹1,080-ம் குறைந்து, ஒரு கிராம் ₹7,085-க்கும், ஒரு சவரன் ₹56,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ₹1,080 குறைந்து ₹56,680-க்கு விற்பனை செய்யப்பட்டதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 13 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹3280 குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் நேற்று காலையும் மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதாவது, கிராமுக்கு ₹40 குறைந்து ஒரு கிராம் ₹7,045-க்கும், சவரனுக்கு ₹320 குறைந்து ஒரு சவரன் ₹56,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை சரிந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் திருமண சீசனில் தங்கத்தின் விலை குறைந்திருப்பதால் பலரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

The post தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; கடந்த 13 நாட்களில் சவரனுக்கு ₹3280 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: