ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைத்து பேசுவதா? பாடகி மோகினி டே ஆவேசம்

மும்பை: சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாயிரா பானு அறிவித்தார். இதற்கிடையே ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணியாற்றும் பாடகி மோகினி டே தன் கணவர் மார்க் ஹர்ட்சுவை பிரிவதாக அறிவித்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் (ரஹ்மான், மோகினி டே) குறித்து சில தகவல்கள் வதந்திகளாக பரப்பப்பட்டது. இது தொடர்பாக , ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன், ‘என் தந்தை அவரின் வியக்கத்தகு திறமைக்காக மட்டுமல்ல, பல ஆண்டுகளாக அவர் சம்பாதித்த மதிப்பு, மரியாதை, பிறர் மீதான அன்பிற்காகவும் புகழப்படும் ஒரு லெஜெண்ட். ஆனால், அவர் குறித்து தவறான, ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவதைப் பார்க்கும்போது வருத்தமளிக்கிறது. ஒருவரின் வாழ்க்கை குறித்து விமர்சிக்கும்போது, நாம் அனைவரும் அவர்களின் தனியுரிமை, அந்த விமர்சனத்தின் உண்மைதன்மை, விமர்சனத்துகுரியவரின் மரியாதை ஆகியவற்றையும் நினைவில் கொள்வோம்.
தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், மோகினி டே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘என் மீதான விமர்சனங்கள் தொடர்ந்தபோது, பல நேர்காணல்களுக்கு டிவி சேனல்கள் மற்றும் யூடியூப் மூலம் அழைப்பு வருகிறது. அந்த அழைப்பின் பின்னணியில் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும். நான் அவைகளை மரியாதையுடன் நிராகரிக்க விரும்புகிறேன். இந்த வதந்திகளுக்கு தீனிப்போடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. எனது ஆற்றல், வதந்திகளுக்கு பதில் கூறி செலவழிக்கத் தகுதியற்றது என்றே நம்புகிறேன். தயவுசெய்து எனது தனியுரிமையை மதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

The post ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைத்து பேசுவதா? பாடகி மோகினி டே ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: