வருசநாடு: வீரக்கல்லில் பழமையான கோயிலில் 18ம் நூற்றாண்டு செப்பேடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் வருசநாட்டு செல்வம், தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம் வீரக்கல் பகுதியில் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள வீரக்கல் செளடம்மன் கோயிலில் 18ம் நூற்றாண்டை சேர்ந்த 2 செப்பேடுகள் இருப்பதை கண்டறிந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: வீரக்கல் வெள்ளைமாலை வீருமாரம்மன் மற்றும் செளடம்மன் கோயில்களில் கள ஆய்வு செய்தோம். இதில் சௌடம்மன் கோயிலில் 2 செப்பு பட்டயங்கள் இருப்பதை கண்டறிந்தோம்.
முதல் செப்பேடு 20 செ.மீ. நீளம், 9 செ.மீ. அகலம் கொண்டது. இதில், முதல் பக்கத்தில் 23 வரிகள், 2ம் பக்கத்தில் 20 வரிகள் என மொத்தம் 43 வரிகள் செதுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் செப்பேடு 18.3 செ.மீ. நீளம், 9.4 செ.மீ. அகலம் கொண்டது. இதில் முதல் பக்கத்தில் 19 வரிகள், 2ம் பக்கத்தில் 14 வரிகள் என மொத்தம் 33 வரிகள் உள்ளன. இதில் ஒரு செப்பேட்டில் கோயில் காரியத்திற்கு சன்னதியில் வைத்து எடுக்கும் திருநீற்று பணத்திற்கு இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல், அதனால் கோயில் வழிபாடு நிறுத்தப்பட்டது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக இனக்குழு பெரியவர்கள் ஒன்றுகூடி இரு தரப்பையும் அழைத்துப் பேசி தீர்வு கண்ட தகவலும் இடம்பெற்றுள்ளது. 2வது செப்பேடு தெளிவின்றி இருப்பதால் முழுமையான தகவலை அறிய முடியவில்லை.
இதில், வீரக்கல் செளடம்மன் கோயில் வழிபாடு தொடர்பாக அண்ணன் – தம்பிக்குள் ஏற்பட்ட பிரச்னையை பெரியவர் ஒருவர் முன்னிலையில் பேசி தீர்த்த தகவல் இருப்பதை ஒருவாராக அறிய முடிகிறது. இந்த செப்பேடுகள் தற்போது செளடம்மன் கோயிலை நிர்வாகம் செய்து வருபவரிடம் உள்ளன. இதுபோன்ற செப்பேடுகள் பழங்கால சமூக நிகழ்வுகளை அறிய உதவுகின்றன என்று தெரிவித்தனர். மேலும், செப்பேடுகளை வாசிக்க கல்வெட்டு ஆய்வாளர் ச.கிருஷ்ணமூர்த்தி உதவியதாக தெரிவித்தனர்.
The post வீரக்கல் கோயிலில் 18ம் நூற்றாண்டு செப்பேடுகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.